உத்துசான் மலேசியாவை காப்பற்ற மக்கள் பணமா?

utusanநேற்று கோலாலம்பூரில் உத்துசான் மலேசியா நாளிதழ் தலைமையகத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த பிரதமர் நஜிப் ரசாக் அரசாங்க ஏஜென்சிகளும், அரசாங்க தொடர்புடைய நிறுவனங்களும் உத்துசான் மலேசியாவில் அதிகமாக விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“அனைத்து அரசாங்க ஏஜென்சிகளும், அரசாங்கம் தொடர்புடைய  ஜிஎல்சிகளும் மற்றும் தனியார் நிறுவனங்களும், குறிப்பாக பூமிபுத்ராக்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள், உத்துசானுக்கு அதிகமான விளம்பரங்கள் தருவதின் மூலம் அவற்றின் ஆதரவை காட்ட வேண்டும். இது மட்டுமே உத்துசான் தொடர்வதற்கு உதவ முடியும்”, என்று பிரதமர் நஜிப் கூறினார்.

உத்துசானுக்கு அதிகமான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று பிரதமர்  நஜிப் விடுத்துள்ள இந்த வேண்டுகோள் மக்கள் 1suaram puaவரிப் பணத்தைப் பயன்படுத்தி உத்துசானை காப்பாற்றுவதற்கான அப்பட்டமான முயற்சியாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா சாடியுள்ளார்.

வாணிக அடிப்படையில் உத்துசான் தாக்குப்பிடிக்க இயலாது என்பது தெளிவாகி விட்டது. ஆகவே, இந்த இன மற்றும் தீவிரவாத கருவியைக் காப்பற்ற இந்த அவசர வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.

“பிரதமரின் இந்த கபட நடவடிக்கை இன்னும் கூடுதலான அதிர்ச்சியை அளிக்கிறது, ஏனென்றால் உத்துசான் மலேசியாவின் உரிமையாளர் அம்னோ ஆகும். நஜிப்பே அதன் தலைவர். ஆக, நஜிப்பே அவரது சொந்தக் கட்சியைக் காப்பாற்ற மக்களின் பணத்தை அதற்குத் திருப்பி விடுகிறார். இது சுயநலன்களின் நேரடி மோதலாகும்”, என்று டோனி புவா அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

தேவைப்படும் சீர்திருத்தங்களை நஜிப் மேற்கொள்வார் என்று அவரை நம்ப முடியாததற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று டோனி புவா மேலும் கூறியுள்ளார்.