‘நா காக்க வேண்டும் பகாங் மந்திரி புசார்’

adnanசீன மலேசியர்கள் மாநில மலேசிய நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது குறைவாக உள்ளதாகக் குறைகூறி, இனிவரும் காலங்களில் அவ்வாறு இருக்கக்கூடாது என்று எச்சரித்த பகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கூப் மசீசவின் கண்டனத்துக்கு இலக்கானார்.

அந்த எச்சரிக்கை ஒரு மிரட்டலுக்கு ஒப்பானது என்றுரைத்த மசீச அலோர் காஜா எம்பி கோ நை கொங், நேற்று குவாந்தான் நிகழ்வில் சீனர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததை வைத்து அட்னான் அச்சமூகத்தின் நாட்டுப்பற்றை எடைபோடக் கூடாது என்றார்.

“நாட்டுப்பற்றைக் காட்ட பல வழிகள் உள்ளன. கொடி பறக்கவிடல், தேசிய தின, மலேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளல்,  நாட்டுப்பண் பாடுதல் போன்றவற்றின் மூலமாகத்தான் அதைக் காண்பிக்க வேண்டும் என்பதில்லை”, என கோ ஓர் அறிக்கையில் கூறினார்.

ஒரு மந்திரி புசாரான அட்னானுக்கு பேசுவதில் கவனம் தேவை என்றாரவர்.

கோ சொல்வது  சரிதான் என்றுரைத்த  மசீச இளைஞர் தலைமைச் செயலாலார் சாய் கிம் சென், அட்னான் சர்ச்சைக்குரிய முறையில் பேசுவது இது முதல்முறை அல்ல என்றார்.