அரசாங்க நிகழ்வுகளிலும் அம்னோ தேர்தல் காய்ச்சல்

1-shafieஇன்னும்  ஒரு மாதத்தில் அம்னோ கட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள வேளையில்,  தேர்தல் வேட்பாளர்கள், அதிலும் குறிப்பாக அவர்களில்  அமைச்சர்களாக இருப்பவர்கள், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தேர்தலைப் பற்றி மக்களுக்குக் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு நினைவூட்டத் தவறுவதில்லை.

நேற்று,  புத்ரா ஜெயாவில் கார்னிவெல்  உசாஹாவான் டேசா தொடக்க விழாவில்,  பேசிய கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சர் முகம்மட் ஷாபி அப்டால்,  அம்னோ துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட துணைப் பிரதமர் முகைதின் யாசினுக்குப் பாராட்டு தெரிவித்துக்கொண்டு  தம் உரையைத் தொடக்கினார்.

“அவ்விரு தலைவர்களும் (முகைதினும், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும்) கட்சிக்கும் மட்டுமல்லாமல் அரசாங்கத்துக்கும் தொடர்ந்து தலைமை ஏற்க வேண்டும் என விரும்புகிறோம்”, என்றவர் குறிப்பிட்டார்.

அந்நிகழ்வில், அந்தப் பேச்சு பொருத்தமற்றதாகத்தான் இருந்தது.  அது கட்சித் தேர்தலுக்கான மறைமுகமான பரப்புரை போலத் தோன்றியது.

பின்னர், அந்நிகழ்வை முடித்துவைத்து பேசிய முகைதின், தம் பங்குக்கு ஷாபி அம்னோ உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை மறக்காமல் குறிப்பிட்டார்.

அது கூட்டத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. பலர் அதை வரவேற்கும் வகையில் ஆரவாரம் செய்தனர்.