உங்கள் கருத்து: அம்னோவுக்குப் பிடித்தமானவர் கோ சூ கூன்

 நஜிப்: முடிவெடுக்கும் பொறுப்பை கோவிடமே விட்டுவிடுகிறேன்

பல இனவாதி: கெராக்கான் தலைவர் கோ சூ கூன் மிகவும் நல்லவர்.ஆனால், அரசியலுக்குப் பொருத்தமானவர் அல்லர். கெராக்கான் இப்போது கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் அதற்கு யார் தலைமை வகித்தால் என்ன, முடிவு ஒன்றுதான். பல ஆண்டுகளுக்குமுன் பிஎன்னில் சேர அது முடிவு செய்ததல்லவா, அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறது.

அரசியலில் நீங்கள் கீழே விழுந்துவிட்டால் எல்லாரும் ஏறி மிதிப்பார்கள். முகத்துக்கு நேராக சிரிப்பவர்கள்கூட முதுகுக்குப் பின்னே உங்களுக்கு எதிராக வேலை செய்துகொண்டிருப்பார்கள். இப்போதுதான் கோவுக்கு நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பது தெரியவரும்.

கோவுக்கு நான் கூற விரும்புவதெல்லாம் இதுதான் -கெளரவமாக ஓய்வு பெறுங்கள். பயனற்ற ஒன்றைப் பிடித்துக்கொண்டு தொங்க வேண்டாம். பிரதமரின் பேச்சில் ஆதரவாக உள்ளூர எதுவும் உண்டா என்று ஆராய வெண்டாம். அவரே அவரின் குருவான டாக்டர் மகாதிரையும்  துணைப் பிரதமர் முகைதின் யாசினையும் எண்ணிக் கலக்கம் அடைந்திருக்கிறார்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அவர், அவருடைய ‘போஸு’க்கு என்ன செய்தாரோ  அதுவே அவரைத் திருப்பித் தாக்குகிறது. கெராக்கான்,மசீச, மஇகா ஆகிய எல்லாமே செத்த பிண்டங்கள்தான். கோ, தொடர்ந்து இருக்கலாம் அதனால் அவருக்குக் கெராக்கானின் கடைசித் தலைவர் என்ற பெயரைத் தவிர வேறு எதுவும் கிடைக்கப்போவதில்லை.

கலா: 2008 பொதுத் தேர்தலில் மண்ணைக் கவ்விய பின்னர் கெராக்கான் முகவரியற்ற கட்சியாக மாறிவிட்டது. அதற்குப் போகும் பாதையும் புரியவில்லை; புத்துயிர் பெறும் வழிமுறையும் தெரியவில்லை.

இந்நிலையில் தலைமையை மாற்றியாவது பார்ப்போமே என்று நினைக்காமல், பயனற்ற தலைமையை விடப்போவதில்லை என்று  பிடித்துக்கொண்டிருக்கிறது.

தன்னலம் மட்டுமே பேணி மக்களின் அவாக்களைப் பிரதிநிதிக்காத ஒரு தலைவரால் ஆகப் போவது என்ன? அவரைப் பொறுத்தவரை அமைச்சர் பொறுப்பில் இருப்பது அவருக்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால், அது கெராக்கானுக்கு உதவியாக இருக்குமா என்பது வேறு விசயம்.

பெர்ட் டான்: 2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கோ சூ கூன் அரசியல் அரங்கைவிட்டு விலகிச் செல்லத் தயாராவதுபோல்தான் தெரிந்தது. ஆனால், அவர் செல்லவில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை.

கட்சிக்குத் தலைமை ஏற்க அடுத்த கட்ட  தலைவர் ஒருவர் இல்லாதிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், அப்போது டாக்டர் டெங், ஹொக் நன்னுக்கும், கட்சியைவிட்டு விலகி பார்டி சிந்தாவில் சேர்ந்துகொண்ட முன்னாள் உதவித் தலைவர் ஹுவான் செங் குவானுக்குமிடையில் பதவிப் போராட்டம் வேறு நடந்து கொண்டிருந்தது.

அப்போதுதான் நஜிப், துறைப் பொறுப்பில்லா அமைச்சர் பதவியை அவருக்கு வழங்க முன்வந்தார். அது, பதவிவிலகும் எண்ணத்தை மாற்றியிருக்கலாம்.

நேற்று கெராக்கான் ஆண்டுக்கூட்டத்தைத் தொடக்கிவைத்த நஜிப் அதன்பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கோ கட்சித் தலைவராக இருப்பதை ஆதரிப்பதாகக் குறிப்புக் காட்டினார்.

கட்சியில் கோவுக்கு எதிராக பரவலான அதிருப்தி நிலவும் வேளையில் நஜிப் இப்படிச் செய்தது அம்னோவுக்கு விருப்பமான ஆள் கோ சூ கூன்தான் என்பதை நிரூபிக்கிறது.

கென் சான்: 1990-களில் லிம் சொங் இயு-விடமிருந்து பொறுப்பேற்றதும் கோ பினாங்கில் அதிசயங்களை நிகழ்த்திக் காண்பிக்கப் போகிறார் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள்.ஆனால், அவரோ அம்னோ காட்டிய வழியில் சென்று கெராக்கானைத் தொலைத்து விட்டார்.

டுரியான்: கோ என்றும் ஒரு தலைவராக இருந்ததில்லை. அதற்கான கெட்டிக்காரத்தனமோ துணிச்சலோ அவரிடம் இல்லை. அவரைத் தேர்ந்தெடுத்தவர்கள் கெராக்கான் தலைவர்கள் அல்லர். அவர் சொன்னபடி கேட்கும் நல்ல பிள்ளையாக இருப்பார் என்று அம்னோதான் அவரைத் தேர்ந்தெடுத்தது.

அதற்காகத்தான் அம்னோ அவரைவிட துணிச்சல்காரரான கோ செங் தெய்க்கைப் புறந்தள்ளியது.

பினாங்கில் பிஎன்னுக்குத் தலைமை ஏற்க அம்னோ கோரிக்கை விடுக்காது

மை தோர்: பினாங்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதவரை அம்னோ அடக்கித்தான் வாசிக்கும்.

பினாங்கு அம்னோவுக்கு முதலமைச்சர் பதவிமீது எப்போதுமே ஒரு கண் உண்டு. அதை அடைவதற்கு மறைமுகமான முயற்சிகளை அது செய்ததுண்டு. சில அம்னோ தலைவர்கள் வெளிப்படையாகவே அதற்குக் கோரிக்கை விடுத்ததும் உண்டு.

பினாங்கில் கோ சூ கூன் ஆட்சி நடந்தபோது அவரை அம்னோ தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக்கொண்டது. அம்னோவின் சொல்கேட்டும் பிள்ளையாகத்தான் அவர் நடந்துகொண்டார். இதனால் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என்று பினாங்கு மக்கள் ஆத்திரம் கொண்டிருந்தனர்.

அதனால் 2008-இல் ஒரு மாற்றம் ஏற்பட்டது. கெராக்கான், மஇகா, மசீச ஆகியவை விரட்டி அடிக்கப்பட்டன. மாற்றங்கள் ஏற்படுவது பினாங்கில்தான். மாற்றங்கள் மூலமாக பினாங்கு வழிகாண்பிக்கிறது.

ஏலன் கோ:  பினாங்கு பிஎன்-னின் தலைமைப் பொறுப்புக்கு அம்னோ இப்போதைக்குக் கோரிக்கை விடுக்காது. ஆனால், முதலமைச்சர் பதவியைச் சுழல்முறையில் வைத்துக்கொள்ள அது முற்படலாம்-சாபாவில் நடந்ததுபோல். அதன்பின் சாபாவில் என்ன ஆனது என்பதுதான் தெரியுமே.

அது போகட்டும், கோ சூ கூன் எத்தனையோ ஆண்டுகள் பினாங்கு முதலமைச்சராக இருந்தாரே, அப்போது என்ன செய்தார்? 

பினாங்கு அம்னோ அவரை எவ்வளவு சிறுமைப்படுத்தியது. முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி தலையிட்டு அவர்களை அடக்கி வைக்க வேண்டியதாயிற்று.

ரிக் தியோ:மன்னிக்க வேண்டும் நஜிப் அவர்களே. 54 ஆண்டுக்கால பிஎன் ஆட்சி போதும்.இதற்குமேலும் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இம்முறை நாங்கள் பக்காத்தான் ரக்யாட்டுக்கு முன்னிலும் கூடுதல் அதிகாரத்தைக் கொடுக்கப் போகிறோம்.

TAGS: