முனைவர்: பேசுவது யார் பார்த்தீர்களா?

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆட்சி புரிந்த போது அரசர் அமைப்பு முறையை “மிகவும் மோசமாக” நடத்தியுள்ளார் என அரசியலமைப்பு நிபுணரான அப்துல் அஜிஸ் பேரி கூறுகிறார்.

சிலாங்கூர் சுல்தான் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மீது அப்துல் அஜிஸ் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் “கிழக்கத்திய தார்மீகப் பண்புகளுக்குப் புறம்பானவை” என மகாதீர் கூறியிருந்தார்.

“ஆஹா.. யார் பேசுவது பார்த்தீர்களா? ஆட்சியாளர்களை நான் மதிக்கவில்லை என்றும் அது தார்மீகத்துக்கு புறம்பானது என்றும் மகாதீர் சொல்கிறார். அவர் நன்றாகத் தான் இருக்கிறாரா?” என அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியருமான அப்துல் அஜிஸ் மலேசியாகினிக்கு அனுப்பிய மின் அஞ்சலில் வினவியுள்ளார்.

அரசர் அமைப்பு முறை குறித்துத் தாம் சொன்ன கருத்துக்களை 1983லும் 1993லும் மகாதீர் சொன்ன வார்த்தைகளையும் அவர் எடுத்த நடவடிக்கைகளையும் ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்தால் போதும் உண்மையை அறிந்து கொள்வதற்கு என அவர் சொன்னார்.

அப்போது யார் ஆட்சியாளர்களை “மதிக்கவில்லை” என்ற உண்மை தெரிய வரும் என்றார் அப்துல் அஜிஸ்.

“1983ம் ஆண்டு அவர் அகோங்கின் கையெழுத்து இல்லாமல் சட்டங்களை இயற்றுவதற்காக மகாதீர் அகோங்கை ஒதுக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். அவசர காலத்தைப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை அவர் அகோங்கிடமிருந்து பிரதமருக்கு மாற்றினார். அந்தத் திருத்தங்கள் நெருக்கடிக்கு வித்திட்டன.”

“1993ம் ஆண்டு அவர், ஜோகூர் சுல்தான் மாஹ்முட் இஸ்காண்டார் ஹாக்கி பயிற்றுநர் ஒருவரை அடித்ததைத் தொடர்ந்து ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட விதி விலக்கை அகற்றி அவர்களை சிறப்பு நீதி மன்ற விசாணைக்கு உட்படுத்த மகாதீர் விரும்பினார். அதுவும் நெருக்கடிக்கு வித்திட்டது”, என அப்துல் அஜிஸ் குறிப்பிட்டார்.

அந்த இரண்டு சமயங்களிலும் மகாதீர், உத்தேச மாற்றங்களை விளக்குவதற்காக நாடு முழுவதும் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்தார்.

” இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு … பேராக்கில் பக்காத்தான் ராக்யாட் அரசாங்கம் கவிழ்ந்த பின்னர் மந்திரி புசார் நிஜார் ஜமாலுதீனை அகற்றுவதற்கு அரண்மனையின் உதவியை அம்னோ நாடியது சரியே என்று அவர் சொன்னார்.”

“இவ்வாண்டுத் தொடக்கத்தில் சிலாங்கூர் மாநிலச் செயலாளர் நியமன விவகாரத்தில் தமக்கு அதிகாரம் இப்போது இல்லை என சிலாங்கூர் சுல்தான் கூறிய பின்னர் மகாதீர், சுல்தானுடைய அதிகாரங்களைத் தாம் ஒரு போதும் பறிக்கவில்லை என  மிகத் துணிச்சலாகத் தெரிவித்தார். 

தமது பண்புகள் குறித்தும் தொழில் ரீதியிலான நம்பகத்தன்மை குறித்தும் வெளிப்படையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளதால் தாம் வழக்குப் போட எண்ணியுள்ள நபர்களுடன் மகாதீரையும் சேர்த்துக் கொள்வது பற்றி அந்த சட்டத்துறை வல்லுநர் யோசித்து வருகிறார்.

“என் வழக்குரைஞர் ஹனிப்பா மைதின் சொல்வதைப் பொறுத்து, உத்துசான் மலேசியா முதல் பக்கத்தில் மகாதீர் கூறியதாக வெளியிட்டுள்ளதைப் பார்க்கும் போது மகாதீரையும் நாங்கள் சேர்ப்பது நல்லது என நான் நினைக்கிறேன்”, என அப்துல் அஜிஸ் விளக்கினார்.

கோரிக்கை கடிதம்

மகாதீர் தவிர இவ்வாரம் எல்லாத் தரப்புக்களுக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பப்படலாம். அந்தத் தரப்புக்களில் உத்துசான், மற்ற ஊடக நிறுவனங்கள், செனட்டர் எஸாம் முகமட் நூர் ஆகியோரும் அடங்குவர்.

ஜயிஸ் எனப்படும் இஸ்லாமிய விவகாரத் துறையும் அரசு சாரா அமைப்பான ஹரப்பான் கம்யூனிட்டி-யும் சம்பந்தப்பட்ட சர்ச்சை மீது அண்மையில் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா வெளியிட்ட அறிக்கை மீது அப்துல் அஜிஸ் தெரிவித்த கருத்தை அம்னோ. உத்துசான், சில அரசு சாரா அமைப்புக்கள் குறை கூறத் தொடங்கிய பின்னர் அவற்றுக்கு எதிராக அவதூறு வழக்குப் போடுவது பற்றி அப்துல் அஜிஸ் சிந்திக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி டமன்சாரா உத்தாமா தேவாலய மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட ‘நன்றி தெரிவிக்கும் விருந்தில்’ ஜயிஸ் அமலாக்க அதிகாரிகள் ‘சோதனை’ நடத்தினர். முஸ்லிம்களை மதம் மாற்றும் நடவடிக்கையில் ஒரு கும்பல் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில்  அந்தச் சோதனையை மேற்கொண்டதாக ஜயிஸ் கூறியது.

அந்த சோதனைக்குப் பின்னர் பல இனங்கள் கலந்து கொண்ட 12 முஸ்லிம்களை ஜயிஸ் விசாரித்தது. ஆனால் மத மாற்றத்திற்கு போதுமான ஆதாரம் இல்லாததால் எந்தத் தரப்பு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என சுல்தான் ஆணை பிறப்பித்தார். அதே வேளையில் ஜயிஸின் நடவடிக்கையையும் அந்த ஆட்சியாளர் ஏற்றுக் கொண்டார்.

ஜயிஸுக்கு ஆதரவாக சுல்தான் தலையிட்டது குறித்து அப்துல் அஜிஸ் கேள்வி எழுப்பிய பின்னர் உத்துசான், அரசர் அமைப்பு முறைக்கு எதிராக அந்தக் கல்வியாளர் இயங்குவதாகக் கூறிக் கொண்டு அவருக்கு எதிராக பிரச்சாரத்தைத் தொடங்கியது.