முன்னாள் எம்பி: ஊழலைத் தடுக்க போதுமான அதிகாரம் இல்லை

1-prof Aஅரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் ஒவ்வோர் ஆண்டும் முறைகேடுகள், சீர்கேடுகள் பற்றிய தகவல்கள் வருவதற்கு, அப்பிரச்னைகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்குப் போதுமான  அதிகாரம் இல்லாததுதான்  காரணம் என்கிறார் ஒரு முன்னாள் பிஎன் எம்பி.

அதற்காக  உருவாக்கப்பட்ட பொதுக் கணக்குக் குழு(பிஏசி), மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) போன்றவற்றுக்கும்கூட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கிடையாது என கமால் சாலே கூறினார்.

மலாயாப் பல்கலைக்கழக (யுஎம்) பேராசிரியரான அவர், பிஏசி உறுப்பினராகவும் இருந்துள்ளார். அக்குழு கண்டறியும் விசயங்கள் விவாதிக்கப்படுவதில்லை. “தொடர் நடவடிக்கையும்” கிடையாது என்றாரவர்.  .

“பிஏசி அரசு அதிகாரிகளைச் சந்திக்கிறது, கணக்கறிக்கையில் குறிப்பிடப்படும் விவகாரங்களை ஆராய்கிறது. அதன்பின் அரசாங்கத் தலைவர்களிடம் தெரிவிக்கிறோம்.

“அரசுத் துறைகளைக் கேட்டால், நடவடிக்கை எடுத்து விட்டதாகக் கூறுவார்கள்”. நேற்றிரவு யுஎம் கருத்தரங்கம் ஒன்றில் கமால் சாலே இவ்வாறு கூறினார்.

தலைமைக் கணக்காய்வாளர் கவனப்படுத்தும் விவகாரங்கள்மீது எம்ஏசிசி நடவடிக்கை எடுக்கலாம் என்றால் அதற்கும் வழக்குத் தொடுக்கும் அதிகாரம் கிடையாது.

“வழக்குத் தொடுக்கும் அதிகாரம் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்குத்தான் உண்டு. அங்கும் அரசாங்கக் கட்டுப்பாடுதான்  என்பதால் அதனாலும் செயல்பட முடியாதிருக்கிறது”, என்றாரவர்.