அன்வார்: அமைதியாக செயல்படுவதே பக்காத்தான் தலைவர்களின் வழிமுறையாகும்

1 anwarபக்காத்தான் ரக்யாட்  கூட்டணித்  தலைவர்கள், அமைதியான முறையில் செயல்படுவது என்றும்  மாற்றுக்கருத்தைத் தெரிவிக்க தெரு ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதில்லை என்றும் ஏக மனதாக முடிவு செய்துள்ளனர்.

நடந்து முடிந்த பொதுத்  தேர்தலில்  பக்காத்தான்  பெரும்பான்மை  வாக்குகளைப் பெற்றிருந்தாலும்கூட,  அது தெரு ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்து அமைதியாகவே செயல்பட்டு வருகிறது என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

“ஆனால், (பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக் அதை (தெரு ஆர்ப்பாட்டங்களைத் தவிர்ப்பதை)  என்றும் பாராட்டியதில்லை. அதனால்தான் கலந்துரையாடல்  தேவை  என்கிறோம்”, என அன்வார் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குற்றத் தடுப்புச் சட்டத் திருத்தங்களுக்கு பக்காத்தான் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் என்றும் அந்த பெர்மாத்தாங் பாவ் எம்பி தெரிவித்தார்.

“பக்காத்தான் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும். (சட்டத் திருத்தங்களுக்கு எதிராக) தொடர் பரப்புரைகளை நடத்துவோம்”, என்றாரவர்.

ஆனால், ஆர்ப்பாட்டங்களினால் ஏற்படும் குழப்பங்களையும் துன்பங்களையும் அறிந்திருப்பதால் தெரு ஆர்ப்பாட்டங்களைத் தவிர்ப்பது என்று ஒருமித்து முடிவு செய்திருப்பதாக  அன்வார் சொன்னார்.