தொலைந்துபோன போலீஸ் துப்பாக்கிகள் பற்றி இனி யாரும் பேசக்கூடாது

1 ministerஉள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, போலீஸ் ஆயுதங்கள் தொலைந்து போனதற்குக் கவனக் குறைவுதான் காரணம் என்றும் அதில் முறைகேடுகள் நிகழ வாய்ப்பில்லை என்றும் போலீசாரைத் தற்காத்துப் பேசினார்.

“அது கவனக் குறைவால் ஏற்பட்ட தவறு”, என்றாரவர். செய்தியாளர்களிடம் பேசிய ஜாஹிட், அது பற்றி மேலும் விவரிக்க விரும்பவில்லை. அதனால் அவர், மலேசியாகினியை நோக்கி அதன் தொடர்பில் மேலும் கேள்விகள் “வேண்டாம்” என்று கூறினார்.

இந்த உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் பொறுப்பிற்கு உட்பட்ட போலீஸ் படையினரின் கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுக்கு அவர் அரசியல் பொறுப்பேற்று பதவி துறக்க வேண்டும். இதுதான் நேர்மையான, நாடாளுமன்ற முறையின் கீழ் செயல்படும் ஓர் அமைச்சரின் கோட்பாடாக இருக்க வேண்டும். மக்களிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்று கூறும் அதிகாரம் அமைச்சருக்கு கிடையாது. கேள்வி கேட்டு அமைச்சரை பதவிலிருந்து அகற்றும் உரிமை வாக்காளர்களாகிய மக்களுடையதாகும்.

இந்திய நிதி அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் முந்த்ரா இன்சுரன்ஸ் நிறுவனத்தில் அரசாங்க சார்பில் பங்குகள் வாங்கியிருந்தார். அவர் அவ்வாறு செய்தது அமைச்சருக்கு தெரியாது.

இவ்விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. அமைச்சின் ஓர் அதிகாரி எடுத்த நடவடிக்கைக்கு பொறுப்பேற்று தமது நிதி அமைச்சர் பதவியை அதே நிமிடத்தில் துறந்தார் இந்தியாவின் அன்றைய நிதி அமைச்சரான டி.டி. கிருஷ்ணமாச்சாரி. ஓர் அரசாங்க அதிகாரியின் செயலுக்கு பொறுப்பேற்று ஓர் அமைச்சர் பதவி துறந்தது குறித்து கருத்துரைத்த நியுயார்க் டைம்ஸ், “This is a classical example of constitutional accountability” என்று டி.டி. கிருஷ்ணமாச்சாரியை பாராட்டியது.

இங்கு, இந்த அமைச்சர் நொண்டிச் சாக்கு சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார். தப்பித்து விடுவார். ஏனென்றால், இந்நாட்டில் தலையிலிருந்து கால் வரை நொண்டிச் சாக்கு சொல்வது அவர்களின் பாரம்பரியம்!