‘ஐஜிபி-இன் கூற்றுக்கு நேர்மாறாக பேசும் ஜாஹிட், பினாங்கில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒப்புக்கொள்கிறார்’

1 igp‘பொய்களையும் முரண்பாடான கருத்துக்களையும் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்ட அதிகாரிகள் இப்போது அவர்கள் பின்னிய வலையில் அவர்களே சிக்கிக்கொண்டு விழிக்கிறார்கள் என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன்.

நேற்றிரவு தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி,  பினாங்கில் போலீசார் ஐவரை முன்னெச்சரிக்கை விடுக்காமல் சுட்டுத்தள்ளினார்கள் என்பதை ஒப்புக்கொண்டது பற்றி சுரேந்திரன் கருத்துரைத்தார்.

 

“ஐவரும் ஆயுதம் வைத்திருந்ததாக நம்பிய போலீசார் அவர்களைச் சுட்டுக்கொல்வது என முடிவு செய்தார்கள் என்று ஜாஹிட் ஒப்புக்கொண்டது அதிர்ச்சி அளித்தது”, என்றவர் கூறினார்.

போலீசார் செய்தது திட்டமிடப்பட்ட, அப்பட்டமான படுகொலை.

1 pkr“சந்தேகத்துக்குரியவர்களால் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே போலீஸ் சுடலாம்”, என்றாரவர். .

ஜாஹிட் கொடுத்த விளக்கம்,  அதே சம்பவம் பற்றி போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் அளித்த விளக்கதிலிருந்து முற்றிலும்  மாறுபட்டிருப்பதையும்  அந்த பாடாங் செராய்  எம்பி சுட்டிக்காட்டினார்.

போலீஸ் தலைவர் தம் விளக்கத்தில்,  முதலில் அந்த ஐவரும் சுட்டனர்,  அதனால் தம் ஆள்கள் திருப்பிச் சுட்டதாகக் கூறி இருந்தார்.

ஆனால், ஜாஹிட், சந்தேகப் பேர்வழிகள் ஆயுதம் வைத்திருப்பதாக நம்பியதால் போலீஸ் அவர்களை முதலில் சுடுவதெனத் தீர்மானித்தது என்றார்.

“இவற்றில் எது உண்மை? அதிகாரப்  பீடத்தில் உள்ளவர்கள்  பொய்களையும் முரண்பாடுகளையும் கொண்டு பின்னிய வலையில் தாங்களே சிக்கிக்கொண்டதுபோல் தெரிகிறது”,  என்று சுரேந்திரன் கூறினார்..   கொலை தொடர்பான உண்மையை மறைத்ததற்காக ஜாஹிட், ஐஜிபி ஆகிய  இருவரையுமே விசாரிக்க வேண்டும் என்றாரவர்.