தமிழ்ப்பள்ளிக்கு பினாங்கு அரசு நிலம் கொடுக்கவில்லை

பினாங்கு இண்ட்ராப்,  தலைநிலத்தில் தமிழ்ப்பள்ளி ஒன்றுக்கு மாநில அரசு நிலம் கொடுக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளது.

தமிழ்ப்பள்ளிக்கூடம் கட்ட நிலம் கொடுக்காத மாநில அரசு  அதே பத்து கவான் தொகுதியில் ஹல் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்துள்ளது என இண்ட்ராப் பினாங்கின் தலைவர் கே.கலைச்செல்வம் கூறினார்.

“தமிழ்ப் பள்ளி மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் லாடாங் பத்து கவான் பள்ளிக்கு மூன்று ஏக்கர் நிலம் கேட்டிருந்தோம்”, என கலைச்செல்வம் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

எல்லா தேசியவகை தமிழ்ப்பள்ளிகளும் முழு-உதவி பெறும் பள்ளிகளாக மாறும், பள்ளிக் கட்டிடங்கள் தரத்தில் தேசிய பள்ளிகளுக்கு இணையாக இருக்கும் என டிஏபி,  கேலாங் பாத்தா பிரகடனத்தில் இந்திய சமூகத்துக்கு வாக்குறுதி அளித்திருந்ததைக் கலைச்செல்வன் நினைவுபடுத்தினார்.

“மூன்று ஏக்கர் நிலத்தின் விலையைக்கூட எங்களுக்குத் தெரிவிக்க மறுத்து  ஹல் பல்கலைக்கழகம் அமைக்க அவரின் மேம்பாட்டு நிறுவன நண்பர்களுக்கு நிலத்தை விற்றிருக்கும் குவான் எங்கிடம் நான் கேட்கும் கேள்வி இதுதான், அனைவரும் சமம் என்று நீங்கள் வழங்கிய வாக்குறுதி என்னவாயிற்று?.

“மக்களின் அவாக்கள்தான் தங்கள் கொள்கையின் மையப் பகுதியாக இருக்கும் என்ற டிஏபி-இன் வாக்குறுதி என்னவாயிற்று?”, என்றவர் வினவினார்.

கேலாங் பாத்தா பிரகடனம் “பொய்களின் பொட்டலம்” என்றவர் சாடினார்.