தமிழ்ப்பள்ளிகளுக்கான 2000 ஏக்கர் நில ஒப்பந்தம் குறித்த முழு விபரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும்

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 26, 2013.

kulaகடந்த புதன்கிழமை, 23 ஆம் தேதி ஈப்போவில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கமும் பேராக் இந்திய மேம்பாட்டு கல்வி வாரியமும் 2000 ஏக்கர் நிலத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதாக  தமிழ் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 

இந்த நிலம் எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல. மாறாக,  இது முழுக்க முழுக்க இந்திய மாணவர் சமுதாயத்திற்காக பேராக் மாநில அரசால் ஒதுக்கப்பட்ட நிலம்.

 

இதில் வரும் வருமானம்   தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்திய மாணவர்களுக்கும் போய்ச் சேரும் வண்ணம் வகை செய்யப்பட்டிருக்குமேயானால் இதன் முழுமையான விபரங்கள் பொது மக்களுக்கும் தெரியவேண்டியது அவசியமாகிறது.

 

இதன் தொடர்பில் அடுத்த பேராக் சட்டமன்றக் கூட்டத் தொடரில் பேராக் மாநில மந்திரி புசார்  ஜம்ரி காதிர் ஓர் அறிக்கையை வெளியிடவேண்டும். அந்த அறிக்கையில் இந்த ஒப்பந்ததின் சாராம்சங்கள் முழுமையாக தெரிவிக்கப் படவேண்டும்.

 

முழு விபரம் வேண்டும்

 

இந்த ஒப்பந்தம் எந்த வகையில்  சீனப்பள்ளிகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை விட சிறந்தது என்பதனை அவர் விளக்கவேண்டும்.

 

வெளிப்படையான போக்கை கடைபிடிக்க வேண்டுமென்பதால்,  இது அவசியமாகிறது. நிருவாகச் செலவு எவ்வளவு? நிலத்தை சுத்தம் செய்ய என்ன செலவாகும்? நடவு செய்வதற்கு என்ன செலவு? இதற்கான விளக்கங்கள் இப்பொழுதே கொடுக்கப்பட்டுவிட்டால்,  5 வருடங்களுக்குப்  பிறகு  இவற்றால்  வீண் சந்தேகங்கள் எழ வாய்ப்பிருக்காது.

 

இந்த வாரியக்குழு இயக்குனர்கள் எந்த ஒரு சலுகையையும் இந்த 2000 ஏக்கரில் இருந்து வரும் வருமானத்திலிருந்து பெறமாட்டர்கள் என்று முன்பு கூறியிருந்ததை பேராக் முதல்வர்  சட்ட மன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.

 

மேலும், வாரியக்குழு  உறுப்பினர்கள் நிரந்தரமாக பதிவியில் இருக்கப் போகிறார்களா? அல்லது,  சுழல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட போகின்றார்களா என்பதனையும் அவர் விளக்க வேண்டும்.

 

நான், அமைச்சர்  பழனிவேலுவை சந்தித்த போது, எந்த ஓர் அரசியல்வாதியும் இந்த 2000 எக்கர் நிலத்தில் சம்பந்தப்படக் கூடாது என்று உறுதியாகக் கூறியிருந்தார். ஆனால், நடந்ததோ அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. ஒரு தேசியத் தலைவர் சொன்னதை யாரும் காதில் போட்டுக்கொண்ட மாதிரி தெரியவில்லை. அப்படி என்றால், ..கா தேசியத் தலைவரின் சொல்லுக்கு மரியாதை இல்லையா? இதை தடுக்க பழனிவேலுவிற்கு ஏன் திராணியில்லாமல் போய்விட்டது? இது அவரின் வலுவில்லாத தலைமைத்துவத்தை நன்றாகவே வெளிப்படுத்துகிறது.

 

மைக்கா ஹோல்டிங்ஸ் நினைவிருக்கிறதா?

 

இந்த வாரியத்தில் உள்ள வீராவும்  குமரனும் மைக்கா ஹோல்டிங்ஸில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது கண்கூடு. மைக்கா ஹோல்டிங்ஸ் திவாலானதற்கு இவர்களும்  முக்கிய காராணமாக இருந்தவர்கள். இவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய அறவாரியம் மைக்கா ஹோல்டிங்ஸ் போலவே தனது முடிவை தேடிக்கொள்ளாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

 

குமரன் இருக்க நான்கு, அரையானது!

 

முன்பு குமரன், குனோங் ராப்பாட்  தமிழ்ப்பள்ளிக்கு தலைமை ஆசிரியாராக இருந்த பொழுது 4 ஏக்கராக இருந்த பள்ளி நிலம் தற்பொழுது அரை ஏக்கராக மாறியதற்கு அவர்தான் முக்கியக் காரணம்.

 

ஒரு தமிழ்ப்பள்ளியின் தலையெழுத்தையே மாற்ற முடியாத  குமரனை 134 பள்ளிகளின் காவலான எப்படி மந்திரி புசார் தேர்ந்தெடுத்தார்? வெறும் அரசியல் அனுபவத்தை மட்டுமே கொண்டு,  வணிக அனுபவமோ தோட்ட அனுபமோ இல்லதாவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்திருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

 

மீண்டும் விஷப் பரிட்சை ஏன்?

 

அரசியலும் வணிகமும் கலக்கும் போது பெரும்பாலான வேளைகளில் அது தோல்வியில்தான் முடிகிறது என்பதை உணர்ந்திருந்தும் கூட இன்னும் இந்த விஷப் பரிட்சை இந்திய சமுதாயத்தை முன்வைத்து ஏன் நடத்தப்படுகிறது?

 

5 வருடங்களுக்குப் பிறகுதான் அந்த நிலம் பயனளிக்க தொடங்கும்  என்று மந்திரி புசார் கூறுகிறார். அது உண்மை என்றாலும், ஏன் சீனப்பள்ளிகளைப் போல  நடவு செய்ய ஆரம்பித்தது முதல் ஒரு குறிப்பிட்ட தொகையை (சீனப்பள்ளிகளுக்கு வருடத்திற்கு 1 மில்லியன் என முதல் 5 வருடங்களுக்கு கொடுப்பதைப் போல ) வாரியத்திடம் வழங்க வகை செய்யும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை?

 

இதை நான் எத்தனையோ முறை கேட்டு விட்டேன். இருந்தும் அதற்கு  வீரசிங்கமும் சரி மந்திரி புசாரும் சரி இதுவரை முறையான விளக்கங்கள் கொடுக்க முன்வரவில்லை.  

 

நாங்கள்  இந்தப் புதிய ஏற்பாடு முறையாக நடைபெறுகிறதா என்பதைக் கூர்மையாக கண்காணித்து வருவோம். வணிக ரீதியாக எதிர்ப்பார்த்த பலனை அது தரவில்லை என்றால், அதற்குரிய புகார்களைச் செய்யவும் தயங்கமாட்டோம்.

 

ஒரு வேளை பாக்காதான் ராக்யாட் கட்சி மீண்டும் பேராக் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் இந்த நில விவகாரம் குறித்து ஒரு முழு  ஆய்வு ஒன்றினை மேற்கொள்ளும். முறைகேடுகள் ஏதும் நடந்திருக்குமேயானால், அவற்றை அம்பலப்படுத்தி அதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்க மாட்டோம் என்று இப்போதே கூறுகிறேன்.