கடந்த வெள்ளிக்கிழமை கோத்தா கின்னாபாலு விமானநிலையத்தில் உள்துறை அமைச்சின் அதிகாரிகளால் மலேசிய ரோமன் கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட்டின் 2,000 பிரதிகள் தடுத்து வைக்கப்பட்டன. இந்தத் தடுத்து வைக்கும் நடவடிக்கை “அல்லாஹ்” என்ற சொல் சாபா மற்றும் சரவாக்கில் பயன்படுத்தலாம் என்று பிரதமர் நஜிப் அளித்திருந்த வாக்குறுதி அலட்சியப்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது என்று சரவாக் பிகேஆரின் தலைவர் பாரு பியன் கூறுகிறார்.
“த ஹெரால்ட் பிரதிகள் தடுத்து வைக்கப்பட்டது பிரதமரின் வாக்குறுதிக்கு மதிப்பில்லை என்பதை நிரூபிக்கிறது.
“அந்தத் தடை சாபா மற்றும் சரவாக்கை கட்டுப்படுத்தாது என்று கூறி நஜிப்பும் அவரது அமைச்சரவை அமைச்சர்களும் சாபா மற்றும் சரவாக் மக்களை ஏமாற்றும் மற்றும் சாந்தப்படுத்தும் முயற்சியில் மட்டுமே தீவிரம் காட்டினர்”, என்று பியன் கூறினார்.
கடந்த திங்கள்கிழமை, கோத்தா கின்னாபாலுவில் பேசிய பிரதமர் நஜிப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சாபா மற்றும் சரவாக் மாநில கிறிஸ்துவர்களை பாதிக்காது என்றும் பெடரல் அமைச்சரவை தீர்மானித்திருக்கும் 10 அம்ச ஒப்பந்தம் நிலைநிறுத்தப்படும் என்றும் கூறினார்.
“இப்போது அந்த வாக்குறுதிகள் பொருட்படுத்தப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சின் அதிகாரிகளின் செயல் பிரதமரின் கீர்த்திக்கு கொடுக்கப்பட்ட நேரடி தாக்குதல் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்”, என்றாரவர்.
சரவாக் பார்ட்டி ரயாக்கின் தலைவர் ஜேம்ஸ் மாசிங் இச்சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார்.
“ஒரு புரிந்துணர்வு இருக்கிறது. ஆனால், சாபாவில் விநியோக்கிப்படவிருந்த தெ ஹெரால்ட் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது என்பது உண்மையானால், அரசாங்கம் ஏகப்பட்ட விளக்கம் அளிக்க வேண்டும்”, என்று ஜேம்ஸ் கூறினார்.
சபா மற்றும் சரவாக்கில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இருந்தது , ஆனால் அங்கு அவர்களின்( பூர்வீக குடிகள் ) தனி சுதந்திரம் பறிபோகவில்லை. இப்போது மாநிலம் சுதந்திரம் பெற்றுவிட்டது , ஆனால் அவர்களின் உரிமைகள் பறிபோய்விட்டது ! நாடு முன்னேறிவிட்டது – ஆனால் அவர்களுடைய சுதந்திரம் நசுக்கப்படுகிறது ! உண்மையை சொன்னால் ISA காத்திருகிறது ??