“ரொம்ப நன்றி” ஒரு பட்ஜெட் நாடகம்

budgetமலேசிய பிரதமர் நஜிப் 2014-ஆம்  ஆண்டுக்கான ஒரு பொறுப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால், அது இரண்டு அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தவறி விட்டது என சாடுகிறார் கா. ஆறுமுகம்.

குறைந்த சம்பளக் கொள்கையில் மாற்றமில்லை என்பதால் இந்த பட்ஜெட் உண்டாக்கும் விலைவாசி உயர்வை மக்களால் சமாளிக்க இயலாது என்றும், அதோடு வீட்டுடமை பிரச்சனை தொடரும் என்றும் ஆறுமுகம் கோடி காட்டுகிறார்.    

உலக நாடுகளுடன் போட்டிப் போடவும், முதலீட்டாளர்களைக் கவர்ந்து அதன் வழி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்தவும் இந்த பட்ஜெட் வழி வகுக்கிறது.

விற்பனை சேவை வரியை அகற்றி அதற்கு பதில்  6 விழுக்காடு பொருள் சேவை வரி (GST),  2015 ஏப்ரல் முதல் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு மக்கள் சில அடிப்படை உணவு பொருட்கள் மற்றும் சில  அத்தியாவசியமானவற்றிற்கு விதிக்கப்படாது என்றும் கோடி காட்டப்பட்டுள்ளது.

ரிம 3,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டம் ( BR1M) வழி ரிம 650 கிடைக்கும். ரிம 3,000 – 4,000 வரை குடும்ப வருமானம் பெரும் குடும்பங்களுக்கு ரிம 450 கிடைக்கும். இந்த உதவித்தொகையோடு பொருள் சேவை வரி அறிமுகப்படுத்தப் பட்டவுடன் மேலும் ரிம 300-யும் அரசாங்கம் வழங்கும்.

ஆனால், விலையேற்றத்தினால் பாதிக்கப்படவுள்ள மக்கள், குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இந்தத் தொகை உதவாது என்கிறார் ஆறுமுகம்.

arumugam_suaramமுதலாவதாக நமது நாட்டின் குறைந்த சம்பளம் என்பது ரிம 900 தான் உள்ளது. இது கூட இன்னமும் முறையாக அமுலாக்கத்திற்கு வரவில்லை. நடைமுறையில் இது போன்ற வருமானத்தைக் கொண்டு யாராலும் ஒரு சராசரி குடும்பத்தை நடத்த இயலாது. இந்நிலையில் BR1M- என்ற உதவிப்பணம் எவ்வகையில் உதவும் என்பது கேள்விக்குறியே.

தற்போது நமது நாட்டில் வேலை செய்யும் அயல் நாட்டினரின் எண்ணிக்கை சுமார் 30 லட்சம் ஆகும். இவர்களைக் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தும் நிலை உள்ளதால், உள்நாட்டு தொழிலாளர்களின் சம்பளம் உயர வாய்ப்பில்லை. இது சார்பாக பட்ஜெட்டில் எதுவுமில்லை. எனவே, வறுமையில் உள்ளவர்கள் மீள்வதற்கான வழி இந்த பட்ஜெட்டில் கிடையாது.

ஆனால் பணம் முதலீடு செய்பவர்களை ஊக்குவிக்க  நிறுவன வரி 25 -லிருந்து 24 விழுக்காடாக குறைக்கப்படுகிறது.  அதோடு அதிக சம்பளம் பெறுபவர்களுக்குக்கான தனி நபர் வருமான வரி 1 முதல் 3 விழுக்காடு குறைக்கப்படும். எனவே பாதிக்கப்படுவது பணம் இல்லாத மக்கள்தான்.  

இரண்டாவது பிரச்சனை வீடு. அடுத்தாண்டு  223,000 புதிய வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை சந்தை விலையைக் காட்டிலும் மக்கள் வாங்கும் தகுதிக்கு ஏற்ற வகையில் குறைவாக இருக்குமாம். கடந்த இரண்டு வருடங்களில் வீட்டின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இந்தத்திட்டம் எப்படி வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு உதவும்? விலையேற்றத்தைத் தாக்கு பிடித்து கடனில்லாமல் வாழ்வதே சிரமம். இந்நிலையில் உள்ளவர்கள்  எப்படி வங்கிக் கடன் பெற்று வீடு வாங்க இயலும் என வினவுகிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம்.

waythaஇந்தியர்களுக்கு அரசாங்கம் 100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதைப் பற்றி வினவியபோது, “அது ஒரு நாடகம்” என்கிறார் ஆறுமுகம். “கல்வி, ஏழ்மை ஒழிப்பு போன்றவை அரசாங்கத்தின் பொறுப்பு. வரிப்பணத்தை வசூல் பண்ணும் அரசாங்கம், நாட்டின் வளத்தைக் கொள்முதல் செய்யும் அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளைத்  தரமான வகையில் நிறைவு செய்வது அதன் கடமையாகும்”

நாடளுமன்றத்தில் பட்ஜெட் சமர்ப்பிக்கும் போது இந்தியர்களின் ஆதரவுக்காக “ரொம்ப நன்றி” என்று கூறிய நஜிப் அந்த ரிம 100 மில்லியன் ஒதுக்கீட்டை அறிவித்தார். ரிம 264,200 மில்லியன் பட்ஜெட்டில் 100 மில்லியன் என்பது வெறும் 0.038 விழுக்காடுதான்.  இதிலிருந்து அவர் இந்தியர்களை எந்த கோணத்தில் வைத்திருக்கிறார் என்பதை உணரலாம் என்கிறார் சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவருமான ஆறுமுகம்.

மேலும், “தேர்தலுக்கு முன்பு  வருடாந்திர ஒதுக்கீடாக ஹிண்ராப் கேட்ட ரிம 4,500 மில்லியனுக்கு புரிந்துணர்வு இணக்கம் அளித்த நஜிப், அது பற்றி வாய்திறக்க வேண்டும்” என்கிறார்.