அஸ்மின்: சிலாங்கூர் மந்திரி புசார் பதவியிலிருந்து காலிட்டை அகற்ற முயலவில்லை

asminபிகேஆர் துணைத்  தலைவர் அஸ்மின் அலி,   சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமை பதவியிலிருந்து அகற்றும்   முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதை  மறுத்துள்ளார்.  காலிட்டைப் பதவியிலிருந்து தூக்க வேண்டிய  அவசியமில்லை  என்றாரவர்.

“எதனால் இவ்விவகாரம்  அடிக்கடி  தலைநீட்டுகிறது  என்று  தெரியவில்லை. நாங்கள் கருத்துச் சொல்லக் கூடாதா,  என்ன?”,  என்றவர் வினவினார். அண்மையில்,  மாநில சட்டமன்றத்தில்  உள்ள அரசு-ஆதரவு உறுப்பினர்கள் மாநில மேம்பாட்டுக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்  என்று கேட்டுக்கொள்ளும்  மகஜர் ஒன்றை காலிட் நிர்வாகத்துக்கு அனுப்பி இருந்ததைக் குறிப்பிட்டு அஸ்மின் இவ்வாறு கூறினார்.

“நாங்கள் நெருக்குதல் கொடுக்கும் தரப்பல்ல. மாநில நிர்வாகம் மேம்பட உதவ விரும்புகிறோம், அவ்வளவே”.

காலிட், கொண்ட கொள்கையில் “திடமாக இருப்பவர்”, “ஊழலுக்கு அப்பாற்பட்டவர்” என்றும் அஸ்மின் வருணித்தார்.