கவுன்சிலருக்கு நல்ல இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது: பிஸ்ஸா ஹட் விளக்கம்

pizzaபெட்டாலிங் ஜெயா கவுன்சிலர் அந்தோனி தனஞ்செயனுக்கு இடமில்லை என மிட் வேலி பிஸ்ஸா ஹட் உணவகம் தடைசெய்யவில்லை, மாறாக அவர் அமர்வதற்கு “வசதியான, விசாலமான” இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது என அந்த உணவகம் விளக்கமளித்துள்ளது.

நேற்று “தொடர்பாடலில் ஏற்பட்ட தவறு” என்று குறிப்பிட்டு அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அந்த உணவகம்,  சக்கரநாற்காலி செல்வதற்கு வழி இல்லாத ஓர் இடத்தில் அமர அந்தோனி விரும்பியதன்  காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறிற்று.

“சக்கரநாற்காலி  தாராளமாகச்  செல்லும் அளவுக்கு உணவகத்தில் இடவசதி இல்லை. திரு அந்தோனி விரும்பிய இடத்தில் அவரை அமர வைத்திருந்தால் அது அவருக்கு வசதிக்குறைவாகவும் அசெளகரியமாகவும் இருந்திருக்கும்”.

anthonyஎனவேதான், சக்கரநாற்காலியில் இருந்த அவருக்கு வசதியாக ஒரு இடம் கொடுக்கப்பட்டது என்று அது கூறியது.

தங்கள் உணவகத்தில் சக்கரநாற்காலிகளுக்குத் தடை இல்லை என்றும்  “மாற்றுத் திறனாளிகளிடம்” பாகுபாடு காட்டுவதில்லை என்றும் அது மேலும் கூறியது.

மாற்றுத்திறானாளிகளுக்காகக் குரல் கொடுத்து வருபவரான அந்தோனி, “சக்கரநாற்காலில் இருந்ததால் (பிஸ்ஸா) உணவகத்தைவிட்டு வெளியேறுமாறு” தம்மிடம் கூறப்பட்டதாக ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.