நாளிதழ் வெளியிடுவதற்கான அனுமதி ஒரு சலுகைதான், உரிமையல்ல, ஒரே மலேசியா அரசாங்கம் கூறுகிறது

Mkini Appealமலேசியாகினி இணையதள உரிமையாளர் எம்கினி டோட்கோம் செண். பெர்ஹாட்டின் நாளிதழ் வெளியிடுவதற்கான அனுமதி கோரிக்கை மீதான மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணையில் வெளியிடுதலுக்கான அனுமதி ஒரு சலுகையே தவிர அது ஓர் உரிமையல்ல என்று அரசாங்கத் தரப்பு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியது.

நாளிதழ் வெளியிடுவதற்கு எம்கினி டோட்கோம் செய்திருந்த மனுவை உள்துறை அமைச்சர் நிராகரித்தது சட்டமீறலாகும் என்பதோடு வெளியிடல் அனுமதி அரசமைப்புச் சட்டப் பிரிவு 10 இன் கீழ் ஓர் உரிமையாகும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் செய்திருந்த மேல்முறையீட்டு விவாதத்தில் அரசுதரப்பு வழக்குரைஞர் நோர்ஹிசாம் இஸ்மாயில் உயர்நீதிமன்ற நீதிபதி தவறு இழைத்துவிட்டதாகக் கூறினார்.

வெளியிடுதல் அனுமதி கோரும் மனுவை நிராகரித்த உள்துறை அமைச்சர் அதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.

எம்கினி டோட்கோம் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து அமைச்சர் அவரது முடிவிற்காக காரணத்தை ஒரு சத்தியப் பிரமாணத்தின் வழி தெரியப்படுத்தினார்.

சத்தியப் பிரமாணத்தில் உள்துறை அமைச்சர் கூறியிருந்த காரணங்களில் இரண்டு கவனத்தை ஈர்ப்பதாக இருக்கின்றன:

1. சந்தையில் அதிகமான நாளிதழ்கள் இருப்பதால், நாளிதழ்கள் வெயீட்டை கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

2. மலேசியாகினி அதன் இணையதளம் வழியாக எதிர்விளைவுகளை உண்டாக்குகின்ற செய்திகளை வெளியிடும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெறும் இவ்விசாரணையை நீதிபதி அலிஸாதுல் கைர் ஓத்மான், நீதிபதி ஆனந்தம் காசிநாதர் மற்றும் நீதிபதி வர்கீஸ் ஜோர்ஜ் ஆகியார் மூவர் அடங்கிய அமர்வு செவிமடுக்கிறது.

 

 

 

 

TAGS: