த ஹெரால்ட் மேல்முறையீட்டை ஆதரிக்கக் கூடாது என்று வழக்குரைஞர் மன்றத்திற்கு முஸ்லிம் வழக்குரைஞர் சங்கம் எச்சரிக்கை

herald“அல்லாஹ்” என்ற சொல் மீதான சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக த ஹெரால்ட் மேல்முறையீடு செய்தால், அதனை ஆதரிக்கக் கூடாது என்றும் ஆதரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முஸ்லிம் வழக்குரைஞர்கள் கூட்டம் ஒன்று வழக்குரைஞர் மன்றத்தை எச்சரித்துள்ளது.

வழக்குரைஞர் மன்றம் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அனைத்து வழக்குரைகளையும் பிரதிநிதிக்கிறது. ஆகவே, வழக்குரைஞர் மன்றம் அம்மன்றத்தின் ஆயிரக்கணக்கான முஸ்லிம் உறுப்பினர்களின் உணர்வுகளை உதறித்தள்ளி விட்டு ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை எடுப்பதற்கு எதிராக தாங்கள் எச்சரிக்கை விடுப்பதாக முஸ்லிம் வழக்குரைஞர்கள் சங்கத்தின் (பிபிஎம்எம்) தலைவர் ஸைனுல் ரிஜால் அபு பாகார் இன்று ஓர் அறிக்கையில் கூரியுள்ளார்.

வழக்குரைஞர் மன்றம் தொடர்ந்து எடுக்கும் நடவடிக்கை அல்லது செயல்பாடு “முஸ்லிம் நம்பிக்கைகளுக்கு முரணானது” என்று கருதப்பட்டால், பிபிஎம்எம் மேல்நடவடிக்கை எடுக்கத் தயங்காது”, என்று அவர் மேலும் எச்சரித்தார்.

வழக்குரைஞர் மன்றத்தின் மனித உரிமை குழுவின் தலைவர் அண்ட்ரு கூ சாபா சட்ட சங்கத்தின் நிலைப்பாட்டை பின்பற்றி வழக்குரைஞர் மன்றம் த ஹெரால்ட்க்கு அதன் ஆதரவை வழங்குவது குறித்து ஆலோசிக்கும் என்று கூறியிருந்ததை மேற்கோள் காட்டி கடந்த புதன்மிழமை த சன் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அது குறித்து விமர்சிக்கையில் ஸைனுல் மேற்கண்டவாறு கூறினார்.