பிரதமரே! இரண்டு நாள் வேணும்!

najib_deepavaliதீபாவளியை மலேசிய இந்தியர்கள் மகிழ்வுடன் கொண்டாட வாழ்த்திய பிரமருக்கு நன்றி என்கிறார் மருத்துவர் சுபா. ஆனால், பிரதமருக்கு நன்றி கூறிய ம இ கா தலைவர் பழனிவேல் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என கேட்டது வியப்பாகவுள்ளது என்கிறார்.

“பல நிலைகளில் சரிவு கொண்டுள்ள நிலையிலும், அரசாங்கம் நம்மை ஒதுக்கிவருகிற நிலையிலும், நமது நிலைப்பாடு பற்றி பேசியிருக்கலாம் என்கிறார் லுமுட்டில் வசிக்கும் சுபா.

இதைப்பற்றி கேட்டபோது கிள்ளான் சேகரன், “நமது தலைவர் அரசியலுக்காக கேட்டுள்ளார்” என்றார். நீங்கள் அவர் நிலையில் இருந்தால் என்ன கேட்பீர்கள் என்றதுக்கு, “எங்களை மதித்து இலங்கையில் நடக்கவுள்ள பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்யுங்கள், என்று மன்றாடி கேட்டிருப்பேன்.”

பீரிக்பீல்ட்ஸ் கந்தசாமி, “ம இ கா தலைவர் எதையாவது கேட்கட்டும், அதுக்கு போய் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும். அவரவர் மூளைக்கு எட்டியதைக் கேட்கிறார்கள், பக்தியில் பரவசம் கொண்ட இவருக்குப் புத்தியில்லையென சொல்ல முடியுமா” என்று வினாவை திருப்பி போடுகிறார்.

பெயர் போட வேண்டாம் என்ற பிரபலமான சமூக இயக்கத்தலைவர், “பழனி மற்றும் கென்னத் ஈஸ்வரன் இருவருமே சமூகத்தை இன்னமும் சரியாக எடை போடவில்லை. அவரவர் படும் வேதனை நாம் இன்னமும் ஒரு மதிக்காத மூன்றாம் தர மக்களாக வாழ்வதுதான். அது சார்பாக பேசாமல் விடுமுறை வேண்டும் என்றும் துதி பாடுவதும், அவர்களது சிந்தனை மாறாமல் இருப்பதை காட்டுகிறது” என்கிறார்.

கவிதைகள் எழுதும் வீரன், “விடுமுறை கேட்டதால் வினை தீருமா?, விடுமுறை கிடைத்தால் விடிவு பிறக்குமா? என்பதெல்லாம் விதண்டாவாதம். வீடும் இல்லை, காடும் இல்லை என்பதால், தீப ஒளியுடன் கடவுளிடம் கேட்க ஒரு நாள் போதுமா, நக்கலாக இரண்டு நாள் கேட்டது நன்றே!” என்கிறார்.

“ஆளை விடுங்கள், இரண்டு கேட்டால் கிடைக்குமா, கிடைக்காது. ஆனால் கேட்டோம் என்பது மட்டும் பதிவாகுமில்லே; கேட்காவிட்டால் அப்புறம் வாயை ஏன் திறக்கவில்லை என்று எழுதுவீங்க” என்றவர் ஒரு நடுநிலைவாதி காப்பாரை சார்ந்த மீனாட்ஷி சுந்திரம்.