இனத் தீவிரவாதம் பொருளாதாரத்துக்குக் கேடு: முன்னாள் அரசதந்திரி எச்சரிக்கை

1-razali2அரசியலில் இன, சமய தீவிரவாதங்களுக்குத் தொடர்ந்து இடமளித்து வந்தால் மலேசியா அதன் பொருளாதார போட்டியிடும் திறனை இழக்கும் என்று முன்னாள் அரசதந்திரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

38 ஆண்டுகளாக அரசதந்திரியாக பணியாற்றி 1998-இல் பணிஓய்வு பெற்றவரான ரசாலி இஸ்மாயில், பல இனங்களையும், பல சமயங்களையும் கொண்ட நாட்டில் அரசியல் வாதங்களும் எதிர்வாதங்களும் தவிர்க்க இயலாதவை என்றார்.

“எங்கோ இருக்கும் பிற்போக்கு நாடென்றால் அவற்றை அப்படியே விட்டுவிடலாம்.

“ஆனால், நாம்  (பொருளாதார வளர்ச்சி காண்பதற்கு) பொருத்தமான இடத்தில் உள்ளோம்…….நம்மிடையே வேறுபாடுகளுக்குத் தீர்வு காண்பது அவசியம்”. ரசாலி, சுற்றுலா, பண்பாட்டு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் பேசினார்.

தாம் அரசதந்திரியாக இருந்தபோது  கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே மலேசியாவை நிலைத்தன்மை நிறைந்த நாடு என்றே கருதினர் என்று தெரிவித்த ரசாலி,. ஆனால், அண்மைக்காலமாக தம் பன்னாட்டு நண்பர்கள் பலரும், நாட்டைப் பிளவுபடுத்துவதுபோல் நடக்கும் நடப்புகள் குறித்து கேள்வி கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்றார்.