பாஸ்: அரசாங்கம் ‘அல்லாஹ்’ விவகாரம் தொடர்பில் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

1 mafuzகிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதை ஒரு விவகாரமாக்கியதற்காக அரசாங்கம் முஸ்லிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் (வலம்) வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த பாஸ் அனுமதிக்கிறது என்றுகூட அவர்கள் பாஸுக்கு எதிராகக் குற்றம் சுமத்தினார்கள் என்று மாபுஸ்(வலம்) செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

“முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்-அல்லாதாருக்குமிடையில் பதற்ற நிலை உருவாகும் வகையிலும் அதே வேளையில் பாஸுக்கு எதிராகவும் விடுத்த அறிக்கைகளை எல்லாம் அவர்கள் மீட்டுக்கொள்ள வேண்டும்”, என்றவர் கூறினார்.

அதே செய்தியாளர் கூட்டத்தில் இருந்த இன்னொரு பாஸ் எம்பி-யான முஜாஹிட் யூசுப் ராவா, பாஸைப் பொறுத்தவரை இது ஒரு விவகாரமே அல்ல என்றார்.

1 mujahit“அரசாங்கம்தான் அதை நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்று பதற்றத்தை உருவாக்கியது”, என்றவர் சொன்னார்.

மேலும், சாபா, சரவாக் மாநிலங்களுக்கான 10-அம்ச தீர்வு,  மலாய் மொழி பைபிளில் ‘அல்லாஹ்’என்ற சொல்லைப் பயன்படுத்த அனுமதிக்கிறது என்பதால் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலும் மாற்றமில்லை என்பது தெளிவாகிறது.

நீதிமன்றத் தீர்ப்பும், த ஹெரால்ட் இதழில் மட்டுமே அதைப் பயன்படுத்தத் தடை விதிப்பதும் முஸ்லிம்-அல்லாதார் அவர்களின் வழிபாட்டின்போது  ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதை அது தடுக்கவில்லை என்பதற்குச் சான்றாகும் என்றார்.

“மலாய்க்காரர்  வாக்குகளையும்  ஆதரவையும்  பெறத்தான்  அது ஒரு பெரிய விவகாரமாக்கப்பட்டது.  அந்த வகையில் மலாய் சமூகம் ஏமாற்றப்பட்டது என்றுகூட சொல்வேன்”,  என முஜாஹிட் குறிப்பிட்டார்.