பிரதமரே தயவு செய்து புறக்கணியுங்கள், 147 அமைப்புகள் மீண்டும் வலியுறுத்து!

pm boikot chogm4பொதுநலவாய மாநாட்டுக்குப் பிரதமர் இலங்கை செல்வார் என்பது உறுதியாகியுள்ள நிலையிலும், அவர் தனது முடிவை மாற்றக் கோரி 147 சமூக அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

இது சார்பாக 33 பக்கங்கள் கொண்ட ஒரு மகஜரை இன்று பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் சமர்ப்பித்தனர். அதைப் பிரதமரின் அந்தரங்க செயலாளர் சைபுல் அஜார் பெற்றுக்கொண்டார்.

சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் ஒருங்கிணைப்பு செய்திருந்த இந்நிகழ்வில்,  தமிழர் பேரவையின் வீ. பூங்குழலி, சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் எல். சேகரன், தமிழ் அறவாரியத்தின் முன்னாள்  தலைவர் கா. உதயசூரியன், அக்கறையுள்ள குடிமக்கள் குழுவின் ப. கந்தசாமி, சமூக சேவையாளர் சாமூவேல்ராஜ் மற்றும் மிப்பாஸ் எனப்படும் மலேசிய இந்திய முன்னேற்ற அமைப்பின் செயலாளர் எஸ். பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

PM Boikot CHOGM1 “பிரதமரே, தயவு செய்து புறக்கணியுங்கள்” என்று தலைப்பிட்ட அந்த மகஜர் பிரதமர் எதற்காக தனது முடிவை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்த போதுமான காரணங்களைக் கொண்டுள்ளது என்று விளக்கினார் ஆறுமுகம்.

இது சார்பாக தான் கடந்த மார்ச் மாதம் முதலே பிரதமர் பொதுநலவாய மாநாட்டுக்குப் போகக்கூடது என்பதை வலியுறுத்தும் பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஆறுமுகம் கூறினார்.  அது சார்பாக இதுவரை  டத்தோ அம்பிகா உட்பட 332 மலேசியர்கள் மின்னஞ்சல் வழி அனுப்பிய மனுவின் சான்றுகளை இந்த மகஜரில் இணைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த மகஜருக்கு இந்தியர்கள் மட்டுமல்லாமல் பல்லின மக்களைக் கொண்ட அமைப்புகளும் இணைந்து பிரதமர் தனது முடிவை மாற்றக் கோரியுள்ளனர்.

PM boikot CHOGM 2இக்ராம் என்ற தேசிய இஸ்லாமிய அமைப்பு, மலேசிய பெண் வழக்கறிஞர்கள் இயக்கம், புரோகம் என்ற முன்னாள் சுகாகம் கமிசனர்களின் சங்கம், கோலாலம்பூர் சிலாங்கூர் அசெம்ளி மன்றம், நீதிக்கான ஜிகாட், ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளை உள்ளடக்கி இந்த மகஜரை 147 அமைப்புகள்  ஆதரித்துள்ளனர்.

இதைக் கொடுத்தும் பிரதமர் இலங்கை சென்றால் என்ன செய்வீர்கள் என்று வினவியபோது, “வேறு என்ன செய்ய முடியும், மக்களின் பிரதமர் மக்களுக்கு மதிப்புக் கொடுக்க தெரியாவிட்டால், அது பற்றி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம்.

மகஜர் பற்றி கருத்துரைத்த பிரமரின் அந்தரங்க செயலாளர் சைபுல் அஜார், “பிரதமர் இலங்கை போர் பற்றிய கருத்துகளை அறிந்துள்ளார், அவற்றை அவர் அந்த மாநாட்டில் விவாதம் செய்வார்” என்றார்.

“தயவு செய்து புறக்கணியுங்கள் என்று பிரதமருக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளோம், கேட்கவில்லையென்றால் அடுத்து நாம்தான் அவரைப் புறக்கணிக்க வேண்டும்” என்கிறார் ஏற்பாட்டு குழுவில் ஒருவரான கந்தசாமி.