அக்டோபர் 20 அம்னோ தேர்தலுக்கு உதவியாக போலீஸ் படை பயன்படுத்திக்கொள்ளப்பட்டதா என்று தாம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிட் அளித்த பதிலில் “நேர்மையில்லை” என டிஏபி எம்பி ஒருவர் கூறுகிறார்.
ஜாஹிட் தம் பதிலில், அம்னோ பேராளர் கூட்டத்தின்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், அந்நிகழ்வுக்கு வந்திருந்த வெளிநாட்டுப் பெருமக்களுக்குப் பாதுகாப்பு அளித்தல் போன்ற பணிகளுக்குப் போலீசார் உதவினார்கள் எனக் குறிப்பிட்டதாக புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம் கூறினார்.
ஆனால், அமைச்சரின் பதில் அம்னோ நிர்வாகச் செயலாளர் அப் ரவுப் யூசுப் விடுத்திருந்த அறிக்கைக்கு முரணாக உள்ளது என ஸிம் சுட்டிக்காட்டினார்.
அப் ரவுப், போலீசார் வாக்குச் சீட்டுக்களை வாக்களிப்பு மையங்களுக்கு அனுப்ப உதவியாகக் குறிப்பிட்டார்.
வாக்குச் சீட்டுக்கள் பாதுகாப்புக்காக மாவட்ட போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சொன்னார்.
“அம்னோ அதன் கட்சித் தேர்தல்களுக்கு போலீசாரைப் பாதுகாவலர்கள்போல் பயன்படுத்திக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது”, என ஸிம் நேற்றிரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்..
“எனவே, அவ்விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சர் சரியான தகவலைச் சொல்லவில்லை”, என்று குறிப்பிட்ட ஸிம், “அம்னோ அரசியல் நடவடிக்கைகளுக்கு போலீசும் மற்ற அரசாங்க வளங்களும் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றன?”, என்றும் வினவினார்.