அம்னோ பேர்வழியின் இனவாதத்துக்கு கெராக்கான் கண்டனம்

asharudinகெராக்கான் உதவித் தலைவர் அஷாருடின் அஹ்மட், “மலாய்க்காரர்களின் கருணையைச் சாதகமாக்கிக்கொண்டு”  என்ன வேண்டுமானாலும் பேசலாம் என சீனர்களும் இந்தியர்களும் நினைக்கக்கூடாது என்று கூறியுள்ள அம்னோ செராஸ் தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹப்ஷியைச்  சாடினார்.

சைட் அலியின் “இனவாதமும் இனச்சார்பான பேச்சும் கோணங்கித்தனமானது, பொறுத்துக்கொள்ள முடியாதது”, என அஷாருடின் (இடம்) கடிந்து கொண்டார்.

இரண்டு நாள்களுக்குமுன்  ஃப்ரி மலேசியா டுடே இணையத் தளத்தில் இடம்பெற்ற ஒரு செய்தி, சீனர்களும் இந்தியர்களும் “மலாய்க்காரர் தலையில் ஏறி மிதிக்கக் கூடாது” என்று சைட் அலி கூறியதாக தெரிவித்திருந்தது.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை காமன்வெல்த் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டது பற்றியும் ஜாலான் பி.ரம்லி ஸ்ரீமுனீஸ்வரர் கோயில் உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சை பற்றியும் கருத்துரைத்தபோது சைட் அலி அவ்வாறு கூறினாராம்.

அப்படிப் பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அஷாருடின் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

“இனவாதத்தையும்  அச்சுறுத்தலையும் நிறுத்த வேண்டும்.

“அது (சைட் அலியின் பேச்சு) மிகப் பெரிய தியாகங்களையும் பங்களிப்பையும் செய்து மலேசியாவை அதன் இப்போதைய நிலைக்கு மேம்படுத்தியுள்ள மற்ற இனங்களை மிகவும் இழிவுபடுத்தும் பேச்சாகும்”, என  அஷாருடின் கூறினார்.