அனைத்தையும் விட மிக முக்கியமானது மனித உரிமைகள், பிரதமர் நவீன்

PM-Navin-Chandra-Ragolam-234x300மோரீசஸ் நாட்டில் 2015 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டிற்கு தலைமை ஏற்கவிருக்கும் அந்நாட்டின் பிரதமர் நவீன் சந்திரா ராம்குலாம் மனித உரிமைகள் மிக முக்கியமானது என்று கூறுகிறார்.

சிறீலங்காவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2013 ஆண்டிற்கான காமன்வெல்த மாநாட்டில் பிரதமர் நவீன் கலந்துகொள்ளவில்லை.

சிறீ லங்காவில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து தாம் கூர்ந்து கவனித்து வந்ததாகவும் வடக்கு சிறீ லங்காவில் காணப்படும் சூழ்நிலையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என்று தமக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்று மோரீசஸ் நாடாளுமன்றத்தில் நவீன் கூறினார்.

சிறீ லங்கா காமன்வெல்த் மாநாட்டின் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தமது முடிவை அறிவித்த நவீன், “மனித உரிமைகள் விவகாரத்தில் சிறீ லங்காவில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் இந்த முடிவை இறைமை பெற்ற மோரீசஸ் எடுத்துள்ளது”, என்று அவர் விளக்கம் அளித்தார்.

மோரீசஸ் நாட்டின் முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிரணித் தலைவருமான பால் ரேமண்ட் பெரெங்கர், சிறீலங்கா மாநாட்டை பிரதமர் நவீன் புறக்கணிக்க வேண்டும் என்று பகிரங்கமாக விடுத்த கோரிக்கைக்கு பதில் அளிக்கையில் நவீன் மேற்கண்டவாறு கூறினார்.

“அனைத்தையும் விட மனித உரிமைகள் மிக முக்கியமானவை” என்று மோரீசஸ் கருதுவதாக நவீன் கூறினார்.

“மனித உரிமைகள் உலகில் எங்கு மீறப்பட்டாலும், சிறீ லங்கா உட்பட, மோரீசஸ் அதனை அலட்சியப்படுத்தியதே இல்லை, அலட்சியமாகவும் இருக்கப் போவதே இல்லை” என்று நவீன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திக் கூறினார்.

TAGS: