சுரேந்திரன்: திரும்பி வருவேன்…..பழிதீர்ப்பேன்

1 surenநவம்பர் 14-இல், நாடாளுமன்றத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட என்.சுரேந்திரனிடம் அவரின் அடுத்த திட்டம் என்னவென்று வினவியதற்கு,  “திரும்பி வருவேன், பழிதீர்ப்பேன்” என்றார்.

“இதற்குமுன் என்ன செய்தேனோ அதைத்  தொடர்வேன். பொதுநலன்  சம்பந்தப்பட்ட  விவகாரங்களை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவேன்”, என்றவர் சொன்னார்.

நாடற்ற மக்கள், சிவப்பு அடையாள அட்டை, போலீஸ் காவலில் நிகழும் இறப்புகள் போன்ற விவகாரங்கள் தொடர்பில் அவசரத் தீர்மானங்களை விடாமல் கொண்டு வரப் போவதாக அந்த பாடாங் செராய் எம்பி கூறினார்.

கோலாலும்பூர், ஜாலான் பி. ரம்லி ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் உடைக்கப்பட்டது குறித்து மக்களவையில் அவசரத் தீர்மானம் கொண்டுவந்து அதை வாசிக்க முயன்றபோது சுரேந்திரன் நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

“நாடாளுமன்றம் ஏவலாள் போன்று ஆகிவிட்டது. ஜனநாயகத்தை வாழவைக்கும் வகையில் அது செயல்படவில்லை”, என்றாரவர்.

அதனால் நாடாளுமன்றத்தில் சீரமைப்புச் செய்து அதன் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்காக நாடுதழுவிய நிலையில் ஓர் இயக்கத்தைத் தொடங்க அவர் உறுதிபூண்டுள்ளார்.