குதப்புணர்ச்சி வழக்கின் மேல்முறையீட்டில் வழக்குரைஞராக முன்னிலை ஆகும் ஷாபி அப்துல்லாவுக்கு அரசாங்கம் கொடுத்த கட்டணத்தை வெளியிடுவதற்கில்லை எனவும் அது வழக்குரைஞர்-கட்சிக்காரர் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதால் இரகசியமானது எனவும் நடப்பில் சட்ட அமைச்சர் நன்சி ஷுக்ரி கூறியிருப்பது தவறான விளக்கம் என டிஏபி எம்பி ஒருவர் கூறினார்..
“ஒரு வழக்குரைஞர் என்ற முறையில் சொல்கிறேன், இரகசியம் என்கிறபோது வழக்குரைஞர், கட்சிக்காரர் பற்றிய விவரங்களையோ, வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிடக்கூடாது.
“ஒரு கட்சிக்காரர் வழக்குரைஞருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பதை வெளியிடுவது அதில் அடங்காது”, என கூலாய் எம்பி தியோ நை சிங்(வலம்) கூறினார்.
2011-இல், தியோ பெங் ஹொக் வழக்கில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம், அதன் வழக்குரைஞராக வாதிட்ட ஷாபியின் சேவைக்காக எவ்வளவு கொடுத்தது என்பதை அப்போதைய பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், தெரிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
“ஈராண்டுகளில் அரசாங்கக் கொள்கையில் மாற்றமா?”, என்றவர் வினவினார்.