2000 ஏக்கர் நில விவகாரத்தில் வீரசிங்கம் உளறுகிறார் !

m-kulasegaran-மு. குல்சேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 19, 2013.

 கடந்த வெள்ளியன்று ஈப்போவில் நடை பெற்ற பேரா ..கா மாநாட்டில் பேராளர்கள், தமிழ்ப் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு வீரசிங்கம் சரியான பதில் கூறாமல் உளறியிருக்கின்றார் என பல ..கா கிளைத் தலைவர்களும் பேராளார்களும் என்னிடம் முறையிட்டுக் கொண்டனர்.

 

முதலாவதாக,2009 ம் ஆண்டு பாரிசான் கட்சி மக்கள் கூட்டணியை கவிழ்த்து பேரா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த போது, தமிழ்ப் பள்ளிகளுக்காக 2000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதாகவும் ஆனால் நிலப்பட்டா 2012 இல்தான் தரப்பட்டது என்றும் கூறினார். அப்படியென்றால் நான்கு வருடங்களாக நிலம்  கிடப்பில் இருந்தது ஏன்? அப்பொழுது அறவாரியம் ஒன்று இல்லை என்றும் அதற்கும் அவரே பதில் கூறுகின்றார்.

 

இந்த கூற்றும் முற்றிலும் ஏற்புடையது அல்ல. ஓர் அறவாரியம் அமைக்க 4 ஆண்டுகளா என்ற கேள்வி  மக்கள் மனதில் எழுகிறது. உண்மை என்னவென்றால்,  வீராவிற்கு, ஓர் அறவாரியம் அமைத்து நிலத்தை அதன் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லை. அப்படி இருந்திருந்தால் நிலம் கொடுக்கப்பட்ட உடனேயே அதற்கான முயற்சியில் அவர் இறங்கியிருப்பார். 4 ஆண்டுகள் பொறுத்திரிந்திருக்கமாட்டார்.

 

சீனப்பள்ளிகளுக்கு  கொடுக்கப்பட்ட நிலம், அவற்றின் அறவாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு அது உடனடியாக சீரமைக்கப்பட்டு இப்பொழுது பலன் தரும் தருவாயில் இருக்கிறது என்பது வீராவிற்கு தெரியாதா என்ன? அப்படி என்றால், அவரின் உள் நோக்கம்தான் என்ன?

 

இரண்டாவது, பிரதமர் இவ்விவகாரத்தில் தலையிட்டு இந்த நிலம் ஓர் அறவாரியத்திடம்தான் ஒப்படைக்கப்படவேண்டுமென்று பேரா மாநில முதல்வரிடம் சொன்னதால்தான்,  புதிதாக அமைத்த அறவாரியத்திடம் அந்நிலம் கொடுக்கப்பட்டதாக கூறுகின்றார். பிரதமரிடம் இந்த பிரச்சனையை கொண்டு போகும் அளவிற்கு இதனை மோசமாக்கியவர்   வீராதான்.

 

அடுத்து, பிரதமர் பேரா முதல்வருக்கு கடிதம் அனுப்புவதற்கு யார் காரணம் ? வீரா பிரதமரைச் சந்தித்து இதற்கு ஒரு முடிவு  வேண்டும் என்று கேட்டாரா? அதுதான் இல்லை. உண்மை என்னவென்றால் இந்த நிலம் 4 ஆண்டுகளாகவே வெறுமனே கிடப்பில் இருக்க ஒப்புடையாத மனமுடைய தமிழ்ப்பள்ளிகளின் மேல் அக்கறை கொண்ட சில  நலம் விரும்பிகள் பிரதமர் துறையிடம் முறையிட்டதால்தான் அவர் இதில் தலையிட நேர்ந்தது. பிரதமரும் அதை ஓர் அறவாரியத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று உறுதியாகக் கட்டளை இட்டதால்தான் வீரா ஓர் அறவாரியம் அமைக்க முன்வந்தார் என்பதுதான் உண்மை.

 

இதில்  பிரதமர் தலையீடு இல்லாதிருந்திருந்தால் அந்த நிலம் நிச்சயமாக வீராவால் வேறு விதமாக, சமூகத்தின் எதிர்பார்ப்புக்களுக்கு எதிராக கையாளப்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை! இதுதான் வீராவின் உள் நோக்கமாகும்.  

நேற்று, மாநாட்டில் பேராளர்கள் கேள்வி எழுப்பியதிலிருந்து பார்த்தால் வீரா ..காவில் மாநில அளவிலோ, தேசிய அளவிலோ உள்ள யாரிடமும்  கலந்தாலோசிக்கவில்லை என்று நன்கு தெரிகிறது.

 

இதையே முன்னாள் பேரா சபாநாயகர் கணேசனும் வெளிப்படையாகவே ஒரு முறை  கூறியிருந்தார்  என்பது அனைவருக்கும் தெரிந்ததே.  நான் தேசியத் தலைவர் ஜி. பழனிவேலுவிடம் இது பற்றி  வினவியபோது, தனக்கும் அது பற்றி ஒன்றும் தெரியாது எனவும், வீரா இந்த நிலத்தை கையாண்ட விதத்தில் தனக்கு  திருப்தி  இல்லையெனவும் ..காவைச் சேர்ந்த ஓர் அமைப்புத்தான் இதனைக் கையாளவேண்டும் என்றும்  கூறியிருந்தார், இது பற்றி ஏற்கனவே நான் பத்திரிகையில்  அறிக்கை விட்டிருந்தேன். ஆனால் பழனியும் அது  பற்றி இது வரையில்  எதுவும் செய்ததாக  தகவல் இல்லை.

 

பழனிவேலின் விருப்பப்படி பார்த்தால் இப்போதைய பேரா ..கா தலைவர் கணேசன்தான் அந்த அறவாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து  வீரா தன்னுடைய பினாமியாக பேரா மாநில தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் எஸ். முனியாண்டியை நியமித்திருக்கின்றார் என்றால் அதனில் உள்ள சூட்சமம்தான் என்ன?

 

வீரா அமைத்த இயக்கம் பெயரளவில் அறவாரியம்  என்று இருக்கிறதே தவிர, அது அறவாரியச் சட்டதின் கீழ் பதிவு  செய்யப்படாமல்  நிறுவன சட்டத்தின்  கீழ் பதிவு  செய்யப்பட்டுள்ளது என்பதனை மக்கள்  தெரிந்து கொள்ள வேண்டும். அதன் விளைவாக இது ஒரு  தனியார் நிறுவனம் போல் செயல்பட உள்ளது. இதனையொட்டி நான் ஏற்கனவே கேட்டிருந்த  கேள்விகளுக்கு வீராவோ அல்லது  அதன்  தலைவர்   எஸ். முனியாண்டியோ  விளக்கம்  ஒன்றும் அளிக்கவில்லை.

 

இந்த இயக்குனர்கள் நிரந்தரமாக அந்த பதவியில்  இருக்கப்  போகிறார்களா? அல்லது சுழல் முறையிலா என்ற  எனது  கேள்விக்கு இதுவரை யாரும் பதில் கூறவில்லை. அவர்கள் அமைத்துள்ள நிறுவனத்தின் சரத்துகள் சட்டதிட்டங்கள் பற்றிய  தகவல்கள் இதுவரை  முழுமையாக  வெளியிடப்படவில்லை.

 

எனக்கு  எட்டிய தகவலின்படி வீரா அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக கேள்வி. எத்தனை பேர் அங்கு வேலை பார்க்கிறார்கள? அவர்களின் சம்பளம் என்ன? நிலம்  மேம்பாடு காணும் வரை நிர்வாகச்  செலவுகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? வங்கியில் கடன் ஏதும் பெற்றிருக்கின்றார்களா?  தேசிய  நிலநிதி கூட்டுறவுச் சங்கம் முன்பணம்  எதுவும் கொடுத்துள்ளதா? அல்லது  வீரா தன் சொந்தப் பணத்தைக் கொண்டு செலவுகளை  பார்த்து வருகிறாரா?

 

ஏன் ஒரு  வெளிப்படையான, நேர்மையான விளக்கங்களை வீரா மக்களுக்கு தெரியப்படுத்த தயங்குகிறார்? அந்த 2000 ஏக்கர் நிலத்தில் பேரா மாநில இந்திய மக்களும் பல ..கா தலைவர்களும் உறுப்பினர்களும் ஹோல்டிங்ஸின் முடிவு இதற்கும் ஏற்பட்டு விடக்கூடாதென்று என்னிடம் நிறைய தடவை உருக்கத்துடன் கூறியுள்ளார்கள் என்பதனை வீராவும் மற்ற ..கா தலைவர்களும் தெரிந்து கொள்வது நலம்.

கூடிய விரைவில், மக்களுக்கு சரியானதும், முறையானதும், ஏற்புடையதுமான விளக்கங்களை வீரா அல்லது  எஸ் முனியாண்டி அளிக்கவில்லை என்றால் அடுத்து கூடும் பேரா மாநில  சட்ட  மன்ற  கூட்டத்தில்  இந்த பிரச்சனை  குறித்து விவாதிக்க மக்கள்  கூட்டணி சட்ட மன்ற உறுப்பினர்கள்  கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்பதனை கூறிக்கொள்கிறேன்.

 

 

TAGS: