அஸ்ட்ரோவுக்கு எதிராக ஜிங்கா13 போர்க்கொடி

astroதொலைக்காட்சிச் சேவை வழங்கும் அஸ்ட்ரோவின் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதி அளித்திருப்பது வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வருவதைப் பற்றி அது கவலைப்படவில்லை என்பதைக் காண்பிக்கிறது என அரசுசாரா அமைப்பான ஜிங்கா 13  கூறியது.

பெட்ரோல், சீனி போன்றவற்றுக்கான உதவித்தொகைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள வேளையில் அஸ்ட்ரோ கட்டண உயர்வும் வந்துள்ளது என அதன் செயலாளர் டி.கே. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

“கட்டண உயர்வை இரத்துச் செய்யுமாறு அஸ்ட்ரோவைக் கேட்டுக்கொள்கிறோம்…..அஸ்ட்ரோவும் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்த தகவல், தொடர்பு, பல்லூடக அமைச்சும் மக்கள் படும் அவதிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்”, என்றாரவர்.

அஸ்ட்ரோ, நவம்பர் 24-இலிருந்து அதன் குடும்ப பேக்கேஜுக்கு ரிம2-உம் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான பேக்கேஜுக்கு ரிம5 ரிங்கிட்டும் உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

“வாடிக்கையாளர்களிடமிருந்து பில்லியன் கணக்கில்  ஆதாயம் கண்டுள்ள அஸ்ட்ரோ அதன் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த எந்தக் காரணமுமில்லை”, என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஒளிபரப்புத் தரம் மேம்படவில்லை என்று கூறிய அவர்,  இடிமழையின்போது ஒளிபரப்பு தடைப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.  அதே வேளையில் நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.