மலேசியாவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு

மலேசியாவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு, செம்பருத்தி.கொம் ஏற்பாட்டில்  வருகிற புதன்கிழமை, நவம்பர் 27, 2013 இரவு மணி 7.30 அளவில் கோலாலம்பூர் தான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் நடைப்பெறும். மாவீரர்  நாள் , தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டு தாய்மண் விடுதலைக்காக விதையாகிப்போன போராளிகளை நினைவுகூர்ந்து வீர வணக்கம் செலுத்தி  பெருமைப்படுத்தும் நாள் ஆகும்.

maveerar 1

இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது.  தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.

போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர் நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2009 ஈழப்போராட்டப் பின்னடைவுக்குப் பின் இலங்கை அரசால் மாவீரர்நாள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டும் உள்ளன.

புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவு கூரப்படுகிறார்கள்.

அந்த வகையில், 1990-ஆம் ஆண்டுகளில் இருந்து பலதரப்பட்ட தோழமை இயக்கங்களுடனும் செயற்பாட்டாளர்களுடனும் இணைந்து தேசிய மாவீரர் நாளை செம்பருத்தி இயக்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டு, ஈழப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை நோக்கிய ஒரு முன்னெடுப்பாக மலேசியாவில் தேசிய மாவீரர் நிகழ்வு அனுசரிக்கப்பட வுள்ளது.

கடந்த காலங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளில் பங்குகொண்டிருக்கும் அன்பர்கள் இவ்வாண்டு மாவீரர் நிகழ்விலும் எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மாவீரர் நிகழ்விற்கு வரும் அன்பர்கள் வாய்ப்பிருப்பின் உதிரிப்பூக்களை உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

(சில தகவல்கள் விக்கிபீடியாவின் துணைக் கொண்டு எழுதப்பட்டது)