இந்தியர்கள் தங்களுக்குள் உதவிக்கொள்ள வேண்டும், அரசைக் குறைசொல்லக்கூடாது’- அமைச்சர் அறிவுரை

indianஇந்தியர்கள் அரசாங்கக் கொள்கைகளைக் குறை சொல்லிக்கொண்டிருக்காமல் அவர்களில் உயர்நிலையில் இருப்பவர்கள் வசதிகுறைந்தவர்களுக்கு உதவிட வேண்டும் என ஷாஹிடான் காசிம் கூறுகிறார்.

“கல்விச் சாதனையாளர்கள் என்று பார்த்தால்கூட இந்தியர்களின் விகிதாசாரம் அதிகம்தான். என்ன, உயர்நிலையில் இருப்பவர்களுக்கும் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டவர்களுக்குமிடையிலான இடைவெளி பெரிதாக இருக்கிறது.

indian 1“எனவே, உயர்நிலையில் இருப்பவர்கள் கல்வியைப் பாதியில் கைவிட்டவர்களுக்கு உதவ வேண்டும், அரசாங்கக் கொள்கைகளைக் குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது”, எனப் பிரதமர்துறை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

மக்கள்தொகையில் இந்தியர்களின் விகிதத்துடன் ஒப்பிட்டால் இந்திய மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் எண்ணிக்கை அதிகமாகும். இதுவே, இந்தியர்கள் வெற்றி அடைந்திருப்பதற்குச் சான்று.

நாட்டில் உள்ள மருத்துவர்களில் 30 விழுக்காட்டினர் இந்தியர்கள்.

“வழக்குரைஞர்களில் மலாய்க்காரர்களையும் சீனர்களையும்விட இந்தியர் எண்ணிக்கைதான் அதிகம்”.

எம். குலசேகரனின்(டிஏபி- ஈப்போ பாராட்) கேள்வி ஒன்றுக்கு ஷஹிடான் இவ்வாறு கூறினார்.

ஆனால், குலசேகரன் அமைச்சரின் பதிலை ஏற்கவில்லை. இந்தியர்களுக்கான அரசாங்கக் கொள்கைகள் “தோற்றுப்போன கொள்கைகள்” என்று குறிப்பிட்ட அவர், இந்தியர்கள் சாதித்திருக்கிறார்கள் என்றால்  சொந்த முயற்சிதான் அதற்குக் காரணமாகும் என்றார்.