தேச துரோகம் என்றுரைத்து மிரட்ட வேண்டாம்: வான் ஜுனாய்டிக்குக் கடும் கண்டனம்

1 chieng pkrமலேசிய ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோருவோர்மீது தேசதுரோக சட்டம் பாயும் என்று மிரட்டும் உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பாரை எதிரணித் தலைவர் இருவர் கண்டித்தனர்.

”மலேசிய ஒப்பந்தம் பற்றி விவாதிப்பதில் தேசதுரோகம் எதுவுமில்லை. மலேசியர்கள் அதைப் பற்றிப் பேசக்கூடாது என வான் ஜுனாய்டி கூறுவாரானால் அவர் சரவாக்கியராக இருப்பதற்கோ மலேசியராக இருக்கவோ தகுதியற்றவர்”, என மாநில டிஏபி தலைவரும் கோட்டா செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான சொங் ஜியெங் ஜென் (வலம்) கூறினார்.

அரசியல்வாதிகள் மலேசிய ஒப்பந்தம் பற்றிய விவகாரங்களை எழுப்ப வேண்டாம் அது ஒற்றுமையைக் குலைக்கும் என்று வான் ஜுனாய்டி நேற்று எச்சரித்திருந்தார்.

1 chong pkr“அந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது தேசதுரோகமாகக் கருதப்படலாம்”, என்றவர் குறிப்பிட்டார்.

வான் ஜுனாய்டி இவ்வாறு கூறுவது தவறு என்று சரவாக் மாநில பிகேஆர் துணைத் தலைவரும் பத்து லிந்தாங் சட்டமன்ற உறுப்பினருமான சி சீ ஹொவ்(இடம்) சாடினார்.  “நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். 50ஆம், 60ஆம் ஆண்டுகளில் அல்ல. அதனால் தேச துரோகம், அரச துரோகம் என்று சொல்லி மிரட்ட வேண்டாம்”, என்றாரவர்.