ஜிஎஸ்டி நாட்டின் குறைதீர்க்கும் அற்புத மருந்தல்ல :நஜிப்புக்கு எம்பிகள் அறிவுறுத்தல்

1 gstபொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) என்பது நாட்டை நொடிப்பு நிலையினின்றும் காக்கும் அற்புத மருந்தல்ல என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உணர வேண்டும் என எதிரணி எம்பிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டின் நிதி நிலை வலுவாக உள்ளதா அல்லது நாடு நொடித்துப்போகும் நிலையில் உள்ளதா என்பதை நஜிப் உரைத்திட வேண்டும் என பிகேஆர் பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி, டிஏபியின் பெட்டாலிங் ஜெயா எம்பி டோனி புவா, பாஸ் கட்சியின் ஷா ஆலம் எம்பி காலிட் சமட் ஆகியோர் கோரினர்.

நஜிப், நேற்று ஜிஎஸ்டி-யைக் கொண்டுவராவிட்டால் நாடு நொடித்துப் போகலாம் என்று கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே வேளை அவரின் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான், நாட்டின் நிதி நிலை வலுவாக உள்ளதாய் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

“ஜிஎஸ்டி எல்லாவற்றுக்கும் தீர்வல்ல.  ஹாங்காங்கிலும் அமெரிக்காவிலும் ஜிஎஸ்டி இல்லை. அவை நொடித்துப் போகவில்லை. ஸ்பேய்ன், கிரீஸ் ஆகிய நாடுகளில் ஜிஎஸ்டி உண்டு.  இருந்தும் அவை நொடித்துப்போகும் நிலையில் உள்ளன”, என புவா செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.