பள்ளிமாணவர் அமினுல்ரஷிட்டின் இறப்புக்கு எவரும் பொறுப்பாக்கப்படவில்லை. இந்நிலைக்குச் சட்டத்துறை தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல்தான் காரணம் என்று அமினுல்ரஷிட் குடும்பத்து வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர்.
அவ்வழக்கில் கார்ப்பரல் ஜெனாய்ன் சுபி விடுவிக்கப்பட்டது சரிதான் என்று செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பற்றிக் கருத்துரைத்த வழக்குரைஞர்கள் என்.சுரேந்திரனும் லத்திபா கோயாவும், போலீசால் சுடப்பட்டு இறந்துபோனவர் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறினர்.
“பொதுமக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்த ஒரு வழக்கில் அரசுத்தரப்பு செய்த குளறுபடிகளுக்கு ஏஜி அப்துல் கனி பட்டேய்ல்தான் பொறுப்பேற்க வேண்டும்”, என்றவர்கள் அறிக்கை ஒன்றில் கூறினர்.
“நவம்பர் 26-இல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை என்ற தகவல்கூட அக்குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்படவில்லை. இதிலிருந்தே சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் போக்கைப் புரிந்துகொள்ளலாம்”, என்றவர்கள் குறிப்பிட்டனர்.