தடை உத்தரவு இருந்தாலும் கம்போங் ரயில்வேயில் தீபாவளி உபசரிப்பு நடக்கும்

deepavaliமேம்பாட்டு நிறுவனமான ஒய்டிஎல், கம்போங் ரயில்வே பகுதியில்  மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடைவிதிக்கும் நீதிமன்ற உத்தரவைப் பெற்று வைத்திருந்தாலும்  குடியிருப்பாளர்கள், இன்று அப்பகுதியில் கடைசி தீபாவளி உபசரிப்பை ஒன்றுகூடி நடத்துவது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

ரயில்வே ஊழியர்களான தங்கள் முன்னோர்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவேதான், பத்து தொகுதி தீபாவளி உபசரிப்பை அவர்கள் அங்கு நடத்த அவர்கள் விரும்புகிறார்கள்.

பத்து தொகுதி எம்பி தியான் சுவா, தாம் அதில் கலந்துகொள்ளப்போவதாக மலேசியாகினியிடம் தெரிவித்தார். மற்ற பிகேஆர் தலைவர்களும் போகலாம்.

இதனிடையே, ஒய்டிஎல்லுக்குச் சொந்தமான செந்தூல் ராயா சென். பெர்ஹாட் பேச்சாளர் முகம்மட் சைட் பானி, “எந்தச் சமூகமும் விழா கொண்டாடுவதை நாங்கள் தடுக்கவில்லை”, என்றார்.

“தனியார் நிலத்தில் விழா கொண்டாட நினைத்தால், அனுமதி கேட்பதுதான் முறை, மரியாதை. அவர்கள் கேட்கவில்லை”, எனக் கூறினார்.

பொது உபசரிப்பை  முன்னிட்டு சில நாள்களுக்குமுன்பே போடப்பட்ட கூடாரங்கள் தங்கள் வழக்கமான வேலைக்கு இடையூறாக இருப்பதால் அவற்றை அகற்றக் கோரும் நீதிமன்ற உத்தரவை நேற்று பெற்றதாக முகம்மட் சைட் தெரிவித்தார்.