கடந்த சனிக்கிழமை பேராக்கில் அரசு ஊழியர்களுக்கும் சமூகத் தலைவர்களுக்குமான ஒரு விளக்கக்கூட்டத்தில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்போல் தோற்றமளிக்கும் ஒருவரின் செக்ஸ் வீடியோ திரையிடப்பதாகக் கூறப்படுவதை அம்னோ தகவல்பிரிவுத் தலைவர் அஹ்மட் மஸ்லான் மறுத்தார்.
அந்நிகழ்வில் செக்ஸ் வீடியோ எதுவும் காண்பிக்கப்படவில்லை என்று பிரதமர்துறை துணை அமைச்சருமான அஹ்மட் கூறினார்.
“டிவி1-இலும் டிவி 3-இலும் ஒளியேறிய படங்களும் உத்துசான் மலேசியாவிலும் மற்ற செய்தித்தாள்களிலும் வெளிவந்த படங்களும்தான் போட்டுக்காண்பிக்கப்பட்டன. நான் ஒன்றும் முட்டாள் அல்ல”, என்றவர் மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
சனிக்கிழமை, ஈப்போ ஜூபிலி பேராக் மண்டபத்தில் தகவளிப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதில் ஈராயிரத்துக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களும் சமூகத் தலைவர்களும் என்ஜிஓ-க்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
அதில் அன்வார் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் செக்ஸ் வீடியோ காட்சியும் காண்பிக்கப்பட்டதாக பக்காத்தான் ரக்யாட் நேற்று போலீசில் புகார் செய்துள்ளது என சினார் ஹரபான் இன்று செய்தி வெளியிட்டிருந்தது.
செக்ஸ் விவகாரம் குறித்த விசாரணை இன்னும் நடைபெற்றுவரும் வேளையில் அந்த வீடியோவைத் திரையிட்டது குறித்து பிகேஆர் பேராக் தகவல்பிரிவுத் தலைவர் சுல்கிப்ளி இப்ராகிம் கேள்வி எழுப்பினார்.
“அது ஒரு சட்டவிரோதச் செயல்”, என்பதுடன் ஒழுக்ககேடான செயலுமாகும் என்றாரவர்.
பாஸ்: அம்னோவும் பிஎன்னும் நம்பிக்கை இழந்துவிட்டன
பேராக் பாஸ் துணை ஆணையர் மிஸ்பாஹுல் முனிர், அம்னோவும் பிஎன்னும் நம்பிக்கை இழந்து தவிக்கின்றன அதனால்தான் ஓர் அதிகாரபூர்வ நிகழ்வில் குறிப்பிட்ட அரசியல் தலைவரையும் பக்காத்தான் ரக்யாட்டையும் களங்கப்படுத்த செக்ஸ் வீடியோவைத் திரையிட்டுக் காண்பித்திருக்கிறார்கள் என்றார்.
“மக்களுக்குத் தகவல் அளிக்கும் ஒரு நிகழ்வில் அன்வாரைப்போல் தோற்றமளிக்கும் ஒருவரின் வீடியோ திரையிடப்பட்டது அம்னோ தலைவர்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்பதைக் காண்பிக்கிறது”, என்று மிஸ்பாஹுல் கூறினார்.
அந்நிகழ்வில், அஹ்மட் மஸ்லான், அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்டால், இரண்டாம் நிதி அமைச்சர் அஹ்மட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா, பேராக் மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிர் முதலியோரும் கலந்துகொண்டார்கள் என்றவர் சொன்னார்.
அந்நிகழ்வை, அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பற்றி விளக்கமளிக்க அல்லது அரசின் கொள்கைகளை மக்களுக்கு விளக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றாரவர்.
“ஆனால், அங்கு பக்காத்தான் ரக்யாட்மீது களங்கம் கறிபிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்நிகழ்வையும் அந்த இடத்தையும் செக்ஸ் வீடியோ காண்பிக்க அம்னோ பயன்படுத்திக்கொண்டதை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போலீசாரைக் கேட்டுக்கொள்கிறோம்.
“அம்னோவையும் அதன் தலைவர்களையும் கெளரவமற்றவர்களாகவும் நாகரிகமற்றவர்கல்ளாகவுமே கருதுகிறோம்.
ஒழுக்கக் கேடுமிக்க அம்னோ மற்றும் பிஎன் தலைவர்களைப் பொதுத் தேர்தலின்போது பேராக் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.