பிகேஆர்: மாணவர்களின் தரம் உயர சீரமைப்பு தேவை

1-issaஅனைத்துலக மாணவர் தர மதிப்பீட்டுச் சோதனையில்  மலேசியா  பெற்றுள்ள இடவரிசை குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள  பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார்,   நாட்டின் கல்விமுறையைச் சீரமைக்க இரு-கட்சி அணுகுமுறை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

இரு-கட்சி  உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றத் தேர்வுக்குழு அமைத்து  அதனிடம் மலேசியக் கல்விமுறையைச் சீர்படுத்தும்  பணி  ஒப்படைக்கப்பட வேண்டும்.

அத்துடன்,  இவ்விவகாரம் தொடர்பில் அரசியல்வாதிகள், கல்விமான்கள் ஆகியோரையும் மற்ற முக்கியமானவர்களையும் கொண்ட தேசிய கல்வி மன்றமும் அமைக்கப்பட வேண்டும் என்றாரவர்.

கணிதம், அறிவியல், வாசிப்பு ஆகிய பாடங்களில் மாணவர்களின் தரம் குறித்து 65 நாடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மலேசியா 52வது இடத்தைப் பெற்றிருந்தது. இது, மலேசியாவின் கல்வித் தரம் மேம்பாடடைந்த நாடுகளுக்கு இணையானது என்ற துணைப் பிரதமர் முகைதின் யாசினின் வாதத்தைப் பொய்யாக்குகிறது என நுருல் இஸ்ஸா கூறினார்.