நஜிப், அம்னோவின் போராட்டம் மண்டேலாவின் போராட்டத்தைப் போன்றது அன்று

najibஅம்னோ தலைவர்  நஜிப் அப்துல் ரசாக் தம் கட்சியின் போராட்டம் தென்னாப்ரிக்காவில் இனஒதுக்கல் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர மண்டேலா நடத்திய போராட்டத்துக்கு இணையானது என்று குறிப்பிட்டிருப்பது தவறு.

அதை ஒரு “வெட்கக்கேடான” ஒப்பீடு என்று சாடிய பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், சரியாக சொல்வதாக இருந்தால், அம்னோவின் போராட்டம் தென்னாப்ரிக்காவில் இனஒதுக்கலை வலுக்காட்டாயமாக அமல்படுத்திவந்த வெள்ளையரின் தேசிய கட்சி போராட்டத்தைத்தான் பிரதிபலிக்கிறது என்றார்.

surn“மண்டேலாவின் போராட்டங்களை நாம் அறிவோம். மண்டேலாவே கூறியிருக்கிறார் அவருடைய மிகப் பெரிய பணி இனவாதத்துக்கு எதிரான போராட்டம்தான் என்று”, என சுரேந்திரன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஆனால், அம்னோவோ அதன் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் காலத்திலிருந்து “முழுக்க முழுக்க இனவாத”க் கட்சியாகத்தான் விளங்குகிறது என்றாரவர்.

அம்னோ பொதுப்பேரவையில் ஒவ்வொரு பேராளரும் மலாய்க்காரர் மேலாதிக்கம் பற்றி முழங்கினார்களே, அதுதான் மண்டேலாவின் கொள்கையா எனவும் சுரேந்திரன் வினவினார்.