லிம்: நான் ஒரு சீன முதலமைச்சர் என்பதால் அம்னோ இனவாத விவகாரங்களை எழுப்புகிறது

1 limபூலாவ் ஜெரஜாக்  மாழுத் தீவு என்று மாற்றப்பட்டதாக பினாங்கு சட்டமன்ற எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட் கூறியிருப்பது “ஆபத்தான” விவகாரம் என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

அந்த “தப்பான தகவல்”, மாநில அரசின் தோற்றத்தைக் களங்கப்படுத்தும் நோக்கத்தில் அம்னோ- ஆதரவு” வலைப்பதிவுகளிலும் பரப்பப்பட்டு வருகிறது என்றவர் தெரிவித்தார்.

அது, தாம் ஒரு சீன முதலமைச்சர் என்பதால் தம் பெயரைக் கெடுக்கும் முயற்சியுமாகும் என்றாரவர்.

“தீவின் பெயரை மாற்றுவதாக இருந்தால் சட்டப்பூர்வமாக அதைச் செய்து அரச இதழிலும் அறிவிக்க வேண்டும். ஒரு வழக்குரைஞரான ஜஹாரா இதை அறிந்திருக்க வேண்டும்”, என லிம் குறிப்பிட்டார்.

தம் அரசு தீவின் பெயரை மாற்றியது என்பதற்கும் தீவில் ஓர் ஆலயத்தில் ஒரு தெய்வச் சிலை நிறுவப்பட்டது என்பதற்கும் அம்னோ இதுவரை ஆதாரம் காண்பிக்கவில்லை என்றாரவர்.

மாழு என்பது கடலோடிகளைக் காக்கும் ஒரு பெளத்த தெய்வத்தின் பெயர். தீவில் உள்ள ஓர் ஆலயத்தில் அத் தெய்வச் சிலை நிறுவப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.