பூஜாங் பள்ளத்தாக்கு சம்பவம் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பணிக்குழு அமைக்க வேண்டும், ஹிண்ட்ராப்

bujangஎட்டாம் நூற்றாண்டு கோயில் ஒன்று பூஜாங் பள்ளத்தாக்கில் உடைக்கப்பட்ட சம்பவம் போன்ற ஒன்று மீண்டும் ஏற்படாதிருக்கவும், அங்குள்ள தளங்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு பணிக் குழு அமைக்க வேண்டும் ஹிண்ட்ராப் மலேசியா கூறுகிறது.

பாரம்பரிய வழிகாட்டு குழு தேசிய பாரம்பரிய இலாகா, மாநில மற்றும் மத்திய அரசாங்கம் ஆகியவற்றின் அதிகாரிகளோடு சுயேட்சையான நிபுணர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

“பாரப்பரியச் சட்டம் 2005 இன் கீழ் தேசிய பாரம்பரிய இலாகா அதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளது. சமீபத்தில் சாண்டி 11 க்கு ஏற்பட்ட கதியைப் போல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு அந்த இலாகா மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுடன் ஒருமித்து உடனடியாகச் செயல்பட்டு சம்பந்தப்பட்ட தளங்களின் எல்லைகளை வரைந்து, அந்தத் தளங்களை உடமைப்படுத்தி அவற்றை அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்வதோடு சமீபத்தில் சாண்டி 11க்கு ஏற்பட்டது போன்ற சம்பவம் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

“பாரம்பரிய வழிகாட்டு குழு பாரம்பரிய நிருவாக திட்டம், சம்பந்தப்பட்ட பரிந்துரைகளை அமலாக்கம் செய்வது போன்ற அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்க வேண்டும்.  நிலப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றம், வீடு கட்டுமான மேம்பாடு மற்றும் இதர நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய மருட்டல்களுக்கு எதிர்வினையாற்றுதல் போன்றவைகளும் அதில் அடங்கும்”, என்று வேதமூர்த்தி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

பூஜாங் பள்ளத்தாக்கை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் மற்றும் தேசிய பாரம்பரிய இலாகா ஆகியவற்றிலிருந்து நிதி தயாராக இருந்தும், அதற்கான முயற்சிகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது தம்மை குழப்பமைடயச் செய்திருப்பதாக அவர் கூறினார்.

“தற்போதைய நிலைப்படி, 127க்கு மேற்பட்ட தளங்கள் இருப்பதோடு 90 இதர சாண்டிகள் அடையாளம் காணப்பட்டுள்ள வேளையில், 17 waythamoorthy-Hindrafசாண்டிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன”, என்று வேதமூர்த்தி கூறினார்.

உலக பாரம்பரிய தளங்களை பட்டியலிடும் ஐநாவின் யுனெஸ்கோ அதன் 1987 ஆண்டு ஆய்வில் பூஜாங் பள்ளத்தாக்கை சேர்த்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

400 சதுர கிலோ மீட்டருக்கும் கூடுதலான பரப்பளவைக் கொண்டிருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கில் ஒரு தேசிய வரலாற்று பூங்காவை உருவாக்குமாறு யுனெஸ்கோ அறிக்கை அரசாங்கத்திற்கு பரிந்த்துரைத்துள்ளது என்று வேதமூர்த்தி மேலும் கூறினார்.

“உலகளவில் பூஜாங் பள்ளத்தாக்கு மலேசியாவின் மிகப் பழமையான மற்றும் வளமான தொல்பொருள் பகுதி என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நாட்டின் நலன் கருதி தேசிய பாரம்பரிய இலாகா யுனெஸ்கோவின் 1987 ஆண்டு அறிக்கையை மீண்டும் கவனித்து மலேசியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்”, என்றாரவர்.