இப்போதெல்லாம் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) ஒரு துடிப்பான தொழிலாளர் அமைப்பாக இல்லை என்றாலும், எதிர்வரும் டிசம்பர் 22 இல் நடைபெறவிருக்கும் அதன் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் அரசியல் ஆட்டங்களுக்கும் குறைவில்லை எனத் தெரிகிறது.
எம்டியுசியின் கடந்த 2011 ஆண்டு தேர்தலில் அப்போதைய மூத்த தலைவர் சைட் ஷாரிர் முகமட்டை தலைவர் பதவிக்கான போட்டியில் தோற்கடித்த காலிட் அட்டான் இப்போது கடும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார்.
காலிட்டுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நீதிமன்றம் சாபா வெட்டுமர நிறுவனத்தின் 520 தொழிலாளர்களுக்கு அனுகூலமாக அளித்த தீர்ப்பு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
நீதிமன்ற ஆவணங்களின்படி சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு, சாபா வெட்டுமர தொழிலாளர் சங்கத்தின் தலைவர் நாலோங் அனாக் எங்காஸ் @நோர்டின் அப்துல்லா உட்பட, ரிம1.225 மில்லியன் வழங்க வேண்டும் என்பது தீர்ப்பாகும்.
“தீர்ப்பில் அளிக்கப்பட்டுள்ள தொகையை முறையாக பங்கிட்டு வாதிகளுக்கு அளிக்கப்படுவதை உறுதி செய்யும் முழுப் பொறுப்பும்” எம்டியுசியின் காலிட் மற்றும் அவரது சகா எ. சிவநாதன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.
ஆனால், தற்போது காலிட்டுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டிருப்பவர்கள், அவர்களும் வெட்டுமர தொழிலாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்களே, நீதிமன்றம் அளித்த தொகையில் ஒரு பகுதி தொழிலாளர்களைச் சென்றடையவில்லை என்றும் அதில் எம்டியுசியின் தலைவருக்கும் தொடர்பு உண்டு என்று கூறுகின்றனர்.
2011 ஆம் ஆண்டில், இரு சாபா வெட்டுமர தொழிலாளர் சங்க அதிகாரிகள், நாலோங் உட்பட, ரிம534,700 ஐ மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதன் பேரில் அவர்களுக்கு சிறை தண்டணையும் சவுக்கடியும் அளிக்கப்பட்டது.
புத்துயிர் அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்
ஆனால், காலிட் இதனை மறுக்கிறார். இப்பிரச்னை 2011 ஆண்டு எம்டியுசி தேர்தலின் போதும் எழுப்பப்பட்டது என்றாரவர்.
“என்னை போலீசார் (விசாரணைக்கு) அழைக்கவில்லை. நான் (மோசடியில்) சம்பந்தப்படவில்லை. நான் தொழிலாளர்களிடமிருந்து ஒரு காசு கூட பெறவில்லை. அது கடவுளுக்கு தெரியும். அவற்றை எல்லாம் கடவுளிடமே விட்டு விடுகிறேன்”, என்று தொடர்பு கொண்ட போது காலிட் கூறினார்.
எதிர்வரும் தேர்தல் எம்டியுசியில் பிகேஆரின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கான சோதணையாக அமையும்.