ஜிஎப்ஐ அறிக்கையை அரசாங்கம் மறுக்கவில்லை ஆனால் அதில் ஊழல் என்பது குறைவுதான்

1 paulகுற்றச்செயல்கள், ஊழல், வரி ஏய்ப்பு போன்றவற்றின் மூலமாக 2011-இல் ரிம173.84 பில்லியன் மலேசியாவிலிருந்து வெளியேறியது என நிதியியல் கண்காணிப்பு அமைப்பான Global Financial Integrity(ஜிஎப்ஐ) மதிப்பிட்டிருப்பதை  “மறுக்கவில்லை” என்பதை  அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆனால், அதில் ஊழல் சம்பந்தப்பட்ட பணம் ஒரு சிறு பகுதிதான்.

ரிம173. 84 பில்லியனில் ஊழல் சம்பந்தப்பட்டது 1விழுக்காட்டுக்கும் குறைவாகும் என பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் கூறினார்.

“நான் மறுக்கவில்லை. ஜிஎப்ஐ அதன் அறிக்கையிலேயே குறிப்பிட்டிருக்கும்  மூலதனம் சட்டவிரோதமாக வெளியேறுவதற்கு 80 விழுக்காட்டளவு காரணமாக இருப்பது பொருள் விவரப்பட்டியலில் செய்யப்படும் தில்லுமுள்ளுகள்தான்.  எஞ்சிய 20 விழுக்காடு அதிக வட்டி கிடைக்கும் நிதி மையங்களைத் தேடி வெளியேறும் பணமாகும்.

“அதில் ஊழல் சம்பந்தப்பட்ட பணமும் இருக்கலாம். அது தோராயமாக 3 விழுக்காடாக இருக்கலாம். இதில் போதைப்பொருள், ஆள்கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் வழி பெறப்பட்ட பணமும் அடங்கும்”, என லவ் கூறினார்.

லவ்வின் தோராயமான கணக்கின்படி பார்த்தால்கூட ஊழல் சம்பந்தப்பட்ட ரிம1 பில்லியன் 2011-இல் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளது.