பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடியவர் கைது – குலா கண்டனம்

 

kulasegaranகடந்த சனிக்கிழமை, கெடா, கூலிம் நகரில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அது சம்பந்தமாக ஒரு நபரை போலீசார் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். இன்னும் பலர் விசாரணைக்காக தேசநிந்தனைச் சட்டம் செக்சன் 4(1) இன் கீழ் கைது செய்யப்படவிருக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

2004 ஆம் ஆண்டில், தாம் இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு “எல்டிடி தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்று அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்தது”, என்று குலா கூறுகிறார்.

பயங்கரவாதிகள் என்று கூறப்பட்ட பல உலகத் தலைவர்களின் பிறந்த நாள் இந்நாட்டில் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று கூறிய குலா, “நெல்சன் மண்டேலா, யாசர் அரபாட், சந்திர போஸ் மற்றும் பலரின் பிறந்த நாள்களை நாம் கொண்டாடுகிறோம். இக்கொண்டாட்டங்கள் எல்லாம் இப்போதிலிருந்து தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படுமா?”, என்று அவர் வினவினார்.

“நமது நாட்டுடன் இந்த பயங்கரவாதிக்கு என்ன வேண்டியிருக்கிறது? ஒரு பயங்கரவாதின் புகழ் பாட மக்களை ஏன் அழைக்க முயற்சிக்க வேண்டும்?”, என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கேட்டதாக கூறப்படுகிறது.

ஐஜிபியின் இக்கூற்று தம்மை திகைப்படையச் செய்துள்ளதாக குலா கூறினார்.

khalid-abu-bakar_gifஐஜிபிக்கு தவறான ஆலோசனை வழங்கப்பட்டிருக்கலாம். சுதந்திரப் போராட்டவாதிகள் என்பதின் அர்த்தத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை. தமது மக்களுக்கு எதிரான இனப்பாகுபாடு, கொலைகள் மற்றும் காணாமல் போகுதல் போன்ற கொடுமைகளின் காரணமாக சிறீ லங்காவில் தமது மக்களின் சுயநிர்ணயத்திற்காகப் போராடியவர் பிரபாகரன் என்று குலா கூறினார்.

Rajapakse80,000 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடூரமான மனித உரிமை மீறல்களுக்காக சிறீ லங்கா அரசாங்கத்தை உலகின் பல நாடுகள் பகிரங்கமாக கடுமையாக கண்டித்துள்ள வேளையில் நாம் மன்னித்து விடலாமா என்று குலசேகரன் கேட்டார்..

மலேசியா அங்கம் பெற்றுள்ள ஐநா மனித உரிமை மன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளில் சிறீ லங்காவுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

நாம் இன்னும் முதிர்ச்சியற்ற ஜனநாயமாக இருக்கிறோம் என்று கூறிய அவர், “நான் முன்னாள் மலாயன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சின் பெங்கை அவர் உயிருடன் இருந்த போது பேங்காக்கில் சந்தித்துள்ளேன். அவரைப் பற்றி விரிவாக நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். இது என்னை தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டிய ஒருவாராக்குகிறதா?” என்று அவர் மேலும் வினவினார்.

இது போன்ற தேவையற்ற கைது நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவை விவாதிக்க வேண்டும். இதனை மஇகாவின் இரு அமைச்சர்களும் எழுப்புவார்களா?

“நாம் ஏன் இன்னும் முதிற்சியடையாத ஜனநாயமாக இருக்கிறோம்? நாம் சுதந்திரம் அடைந்து 56 ஆண்டுகள் கடந்து விட்டன.”

TAGS: