எம்சிஎம்சி ரயிஸின் “தனி போலீஸ்படை” அல்ல

தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம், மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணைய(எம்சிஎம்சி)த்தைத் தம் தனிப்பட்ட போலீஸ்படைபோல் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.

“அவ்வாறு செய்வது பேச்சுரிமையை மீற அதிகாரம் தப்பாக பயன்படுத்தப்படுவதற்கு  ஓர் எடுத்துக்காட்டாகும்”, என்று பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“அதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அது பேச்சுரிமையை மீறுகிறது என்பதுடன் கல்விக்கழகங்களின் சுதந்திரத்தையும்  சிறுமைப்படுத்துகிறது”, என்றாரவர்.

அவ்வறிக்கையில், சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகாரத் துறை (ஜயிஸ்)யின் நடவடிக்கை தொடர்பில் சிலாங்கூர் சுல்தான் வெளியிட்டிருந்த அறிக்கையை விமர்சனம் செய்திருந்த சட்ட விரிவுரையாளர் அப்துல் அசீஸ் பாரிமீது எம்சிஎம்சி மேற்கொண்டுள்ள விசாரணை குறித்து சலாஹுடின் கருத்து தெரிவித்திருந்தார்.

சட்ட விரிவுரையாளரைத் தற்காத்துப் பேசிய சலாஹுடின், தம் கல்வி அனுபவத்தை வைத்து அவர் கருத்துரைத்துள்ளார் என்றார்.

எந்த அடிப்படையில் அல்லது எந்தச் சட்டத்தின்கீழ் அவர்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்காததற்காகவும் அவர் எம்சிஎம்சி-யைச் சாடினர்.

சுல்தானின் அறிக்கை,  ஆகஸ்ட் 3-இல் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில், அரசுசாரா அமைப்பான ஹராபான் கம்முனிடி ஏற்பாடு செய்திருந்த நன்றிநவிலும் விருந்துநிகழ்வில் ஜயிஸ் மேற்கொண்ட அதிரடிச் சோதனை தொடர்பில் வெளியிடப்பட்ட ஒன்று.

12 முஸ்லிம்களும் கலந்துகொண்டிருந்த அந்நிகழ்வில் முஸ்லிம்களை மதம் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கேள்விப்பட்டு அச்சோதனையை நடத்தியதாக ஜயிஸ் கூறியது. 

ஜயிஸ் செய்தது சரிதான் என்று அறிவித்த சுல்தான், போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் எத்தரப்பினர்மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.

சுல்தானின் இந்த அறிக்கை “வழக்கத்துக்குமாறானது” என்று அஜீஸ் குறிப்பிடப்போக அது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டது. பல தரப்பினர் அவரைக் கண்டித்து கருத்துரைத்தனர். 

ஆனால், அசீஸ் தம் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். சுல்தான்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்பது அவரது வாதம். ஆட்சியாளர் அமைப்பு அகற்றப்பட வேண்டும் என்று சொல்லக்கூடாது அது தப்பு என்று கூறும் அவர்,  இது ஓர் அரசநிந்தனைக் கருத்தல்ல என்கிறார்.