என்னை கைது செய்தது தவறில்லை, ஆனால் தமிழின தலைவர் பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னதுதான் தவறு – கலைமுகிலன் கண்டனம்!

kalaimugilanஅண்மையில் தமிழின தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வும், மாவீரர்களுக்கு வீர வணக்க நிகழ்வும் ஏற்பாடு செய்திருந்த என்னை காவல் துறை தேச நிந்தனை சட்டதிற்கு கீழ் கைது செய்து தீவிர விசாரணைக்கு பிறகு காவல்துறையின் பிணையில் விடுவித்தார்கள் என்று மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. அ. கலைமுகிலன் பத்திரிக்கைக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டார்.

இதில், தலைவர் பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள், அவர்கள் தொடர்புடைய எந்த நிகழ்வும் நடத்தக்கூடாது என்று கூரிய தேசிய காவல் துறை படை தலைவர் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று கலைமுகிலன் சாடினார்.

ஏன் அவர்  அப்படி கூற வேண்டும்? அதனை மலேசியா அரசு ஆராய வேண்டும், மலேசியா அரசுக்கென்று தனி ஒரு நிலை பாட்டை கொள்ள வேண்டும். நட்பு நாடுகளான சிறீ லங்கா, இந்தியா ஆகியவை விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என கூறுவதனால், அதை மலேசியா அரசும் காவல்துறையும் பின்பற்ற கூடாது.

மேற்கத்திய நாடுகளில் விடுதலைப்புலிகளை “இனத்திற்கு போராடும் அமைப்பாக” சொல்லப்படுகிறது. ஆகையினால், தேசிய காவல் படை தலைவர் எங்களையும் மக்களையும் மிரட்ட கூடாது.

இந்த நாட்டிற்கும் மாமன்னருக்கும், நாங்கள் விசுவாசமாகத்தான் உள்ளோம். எங்களை  தீவிரவாதிகள் போல் சித்தரிக்காதிர்கள், நாங்கள் தேசியவாதிகள் என்று கலைமுகிலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

அப்படி நான் குற்றவாளி  என்றால் ஏன் என்னை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டவில்லை.

விடுதலைப்புலிகளும் பிரபாகரனும் உலக தமிழினத்தின் அடையாளம் அதை தடுப்பதற்கு யாரும் முயற்சி செய்யாதிர்கள் என்றார் கலைமுகிலன்.

விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் இல்லை என்ற அதற்குரிய ஆவணங்களை தன் வழக்கறிஞரிடம் கொடுத்து வைத்திருப்பதாக கலைமுகிலன் கூரினார் .

தேசிய போலிஸ் படை தலைவர் தான் கூறிய “தீவிரவாதம்” என்ற சொல்லை மீட்டு கொள்வதே முறை, இல்லையென்றால் மலேசியாவில் உள்ள பல லட்சம் தமிழ் இளைஞர்களின் கோபத்திற்குள்ளாவார்.