ஹோலிரோடு தமிழ்ப்பள்ளி மூடப்படும் அபாயம்?, குலா எச்சரிக்கை!

kula-மு. குலசேகரன், டிசம்பர் 28, 2013.

 தைப்பிங்கிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்திலுள்ள சிலாமாவிற்கு  அருகாமையில் அமைந்திருக்கும் ஹோலிரோடு தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளி வருகின்ற ஆண்டு மூடப்படும் என்பது உறுதியாகிவிட்டது.

 

ஒரே ஒரு மாணவனைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பள்ளியானது அந்த மாணவனும் இந்த வருடம் 6 ஆம் ஆண்டை முடித்து இடைநிலைப் பள்ளிக்கு போகவிருப்பதால் வேறு வழியின்று  அப்பள்ளி மூடுவிழா காணும் நிலைக்கு வந்துவிட்டது.

 

இந்த நிலைமையை முன்கூட்டியே உணர்ந்திருந்த சில நல்ல உள்ளங்கள், முயற்சி செய்து அந்தப் பள்ளியில்  கடந்த 2011ம் ஆண்டு பள்ளி மேளாளர் வாரியம்  ஒன்றை அமைத்தன.

 

அதன் பலனாக இன்று தாமான் காயாவில் ஒரு நிலம் அடையாளம் காணப்பட்டு அதற்கான நிதியையும் கடந்த 5 ஆண்டு திட்டத்தில் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

நானும் இதனைப் பற்றி நாடாளுமன்றத்திலும் பத்திரிகை வாயிலாகவும் நிறையவே சொல்லி வந்துள்ளேன். ஆனாலும் ..காவினர், குறிப்பாக முன்னாள் பேரா மந்திரி புசார் ஆலோசகர்  கணேசனும்  முன்னாள் பேரா ..கா தலைவர்  வீரசிங்கமும் இதைப் பற்றி அக்கறை கொண்டாதாகத் தெரியவில்லை. இது அவர்கள் பதவியில் இருந்த காலத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது  

 

..கா இந்த நாட்டில்  பாரிசானுடன் இருக்கும் வரையில் எந்த ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது என்றெல்லாம்  கூறி வந்தவர்கள், இந்தப் பள்ளி மூடப்படும் என்று தெரிந்திருந்தும், அதற்கான மாற்று நிலம் அடையாளும் காணப்பட்டுள்ளது என அறிந்திருந்தும் அதைக் கட்டும் முயற்சியில் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்காமல் இருப்பது ஏன்?

 

தமிழ்ப்பள்ளிகளுக்கென ஒரு வியூகமோ எதிர்கால திட்டமோ ஒரு முறையான கொள்கையோ இல்லாமல்   ..கா இது நாள் வரை மக்களை ஏமாற்றி வந்துள்ளது. சரியான தலைமைத்துவமும், இருக்கின்ற தலைவர்கள் தமிழ்ப்பள்ளிகளின் அவசியமும் தமிழ்  மொழியின் முக்கியத்துவமும் அறியாமல் இருப்பதாலும் அவர்கள் இந்த பிரச்சனையை தேர்தல் நேரங்களில் மட்டும் கையிலெடுத்து ஆய்-ஊய் என்று அறிக்கை விடுவதில் மன்னர்களாக இருக்கின்றனர்.

 

தேர்தல் முடிந்தவுடன் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ் மொழியும்  கிடப்பில் போடப்படுகிறது. வீரசிங்கம், பேராவிலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கென ஒதுக்கப்பட்ட  2 ஆயிரம் ஏக்கர் நிலத்தின்பால் காட்டியுள்ள அக்கறையில் ஓர் இம்மியளவு கூட தமிழ்ப் பள்ளிகளுக்கு காட்டவில்லை  என்பதுதான் உண்மை. அப்படி அவருக்கு தமிழ்ப்பள்ளிகளின் மேல் அக்கறை இருந்திருந்தால் இந்நேரம் தாமன் காயா நிலத்தில் ஒரு பள்ளி அமைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 

அதோடு இந்தியர்கள் தோட்டங்களில் இருந்து நகரங்களுக்கு குடி பெயரும் பொழுது அவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தமிழ்ப்பள்ளிகள் கட்டப்பட வேண்டும் என்று நான் நிறையவே  பேசி வந்துள்ளேன்! அது பற்றி ..கா இதுவரை மௌனமாகவே இருந்து வந்துள்ளது.

 

..காவின்  கல்விக் குழு தமிழ்ப் பள்ளிகளுக்காக தொலை நோக்கு  திட்டம் எதுவும் வைத்துள்ளதா?

 

இந்த நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருக்கவும் தமிழ் மொழி வளரவும் தமிழ் மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் சேர ஊக்குவிக்கவும் இந்த கல்விக் குழு இது வரை என்ன  நடவடிக்கைகள் எடுத்துள்ளது?

 

யு பி எஸ் ஆர், பி எம் ஆர் மாணவர்கள் சிறந்த தேர்ச்சி அடையும் பொழுது மட்டும், அவர்களுக்கு வருடம் ஒருமுறை வாழ்துச் சொல்ல ..கா தலைவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு முன்நிற்கிறார்கள். ஆனல் அந்த மாணவர்களின் வளர்ச்சியிலும் தமிழ்ப்பள்ளிகளை காப்பதிலும் அவர்கள் அக்கறை கொண்டதாகாத் தெரியவில்லை.

 

அரசு சார அமைப்புக்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள்  செய்யும் அளவுக்கு கூட ..கா தனது தமிழ்ப்பள்ளிகளுக்கான பணிகளை செய்வதாகத் தெரியவில்லை.

7 புதிய தமிழ்ப் பள்ளிகள்  கட்டப்படும் என்று சென்ற 5 ஆண்டு திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த்தது. அதன் நிலை குறித்து ..கா தகவல் எதுவும் பெற்றுள்ளதா? அதன் கட்டுமானப்பணிகள் எவ்வளவு தூரம் இருக்கின்றது? அதனைக் கண்காணிக்க அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு அவற்றின் முன்னேற்றம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதனை அறிந்து வைத்துள்ளதா? இது போன்ற தகவல்களை இந்நாட்டு இந்திய சமுதாயம் அறிய விழைகிறது.

 

இன்னும் 4 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் பேரா மாநிலத்தில் மூடப்படும் அபாயம் உள்ளது. இதனால் பல தலைமை  ஆசிரியர்கள் தங்களி பதவிகளை  இழக்கும் நிலைமையும் உருவாகும். அதோடு தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையும் குறையும். எண்ணிக்கை குறைந்தால் அரசாங்கத்துடன் நாம் பேரம் பேசும் பலமும் குறையும்.  இதனை நான் எத்தனையோமுறை வலியுறுத்திவிட்டேன். இருந்தாலும் ..கா இதனைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

 

இன்னொரு செய்தியும் என் காதுக்கு எட்டுகிறது. இப்பொழுது தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கு குறைவான  மாணவர்களே சேர்க்கப்படுகிறார்கள் என்பதுதான் அது.

 

நாம் கவனிக்கிறோமோ இல்லையோ, அரசாங்கம் நம்மைப் பற்றியும் நம்முடைய தமிழ்ப்பள்ளிகளின் நிலைமையைப் பற்றியும்  துல்லியமாக  அறிந்து அதற்கேற்ப அவர்களின் செயல பாடுகளை அமைத்து வருகின்றது.

 

ஆனால், அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ் மொழி மீது மேற்கொள்ளும் நடவடிக்கைகளானது பெரும்பாலும் அவை மறைமுகமாக தமிழுக்கு ஊறு செய்வதாகவே இருந்து வந்துள்ளது. மக்களும் ..காவும் இதனை உணர்ந்து காலதிற்கேற்ப அவ்வப்போது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால்தான் தமிழும் தமிழ்ப்பள்ளிகளும் இந்நாட்டில் நீடித்து நிலைக்கும்.

 

பாக்காத்தான் ஆட்சி நடக்கும் பினாங்கு மாநிலத்தில் கூட தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டவேண்டும் என்ற ஆலோசனையை அந்த மாநில அரசு மத்திய அரசுக்கு கூறியுள்ளது! 55 ஆண்டு காலமாக ஆட்சி செய்துவரும் ..கா இதனைப் பற்றி சிந்தித்ததாகக் கூடத் தெரியவில்லை.

பாக்தான் அரசு ஆட்சி அமைத்தால் தமிழ்ப்பள்ளிகளுக்கென்று ஒரு கல்விப் பெருந்திட்டத்தை உருவாக்கி நிரந்தர பாதுகாப்பு வழங்கும் வகையில் திட்டங்கள் செய்வோம் என்று நான் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

 

 

TAGS: