2014-இல், என்னவெல்லாம் விலை உயரும்?

prices 1ஒரு கண்ணோட்டம்  நாட்டின் பற்றாக்குறை நிலயைச் சரிப்படுத்தும் முயற்சியாக அரசாங்கம், அத்தியாவசிய பொருள்கள் பலவற்றுக்கு கொடுக்கப்பட்டுவந்த உதவித்தொகையை நிறுத்தியது அல்லது  குறைத்தது.

அதனைக் “குறுகிய-கால வலிதரும் நடவடிக்கை” என்று  குறிப்பிட்ட அரசாங்கம், நிதிநிலையின் நீண்டகால நன்மையைக் கருதி அதனைச் செய்ய வேண்டியது  அவசியமாயிற்று என்றது.

அந்நடவடிக்கையின் தொடர் விளைவாக பல பொருள்கள், சேவைகளின் விலை கூடியுள்ளது.

இதுவரை விலை உயர்ந்துள்ள பொருள்கள்:

1) ரோன் பெட்ரோல்- செப்டம்பர் 3இல், ஒரு லிட்டர் ரிம1.90 இலிருந்து ரிம2.10 ஆக  உயர்ந்தது.

2) டீசல்- செப்டம்பர் 3இல், ரிம1.80 இலிருந்து ரிம2.00 ஆக உயர்ந்தது.

3) சீனி- அக்டோபர் 25 இல், கிலோ ரிம2.50இலிருந்து ரிம2.84 ஆக உயர்ந்தது.

ஆக, விலை உயர்வு  மூன்று பொருள்களில் மட்டுமே. அந்த வலையில்  மோசமில்லைதான். ஆனால், அடுத்த  ஆண்டில், என்னவெல்லாம் விலை உயரும்?

prices toll1) நெடுஞ்சாலை கட்டணங்கள்

எப்போது என்று அறிவிக்கப்படவில்லை. அதன் தாக்கத்தைக் குறைக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக அரசாங்கம்  கூறியுள்ளது. 

13 நெடுஞ்சாலைகளில் ரிம0.30 இலிருந்து ரிம1 வரை கட்டணங்கள் உயராம் எனச் செய்திகள் கூறுகின்றன.

1 pprices taxi2) டெக்சி, பேருந்து, ரயில் கட்டணங்கள்

10 ஆண்டுகளாக ரயில், எல்ஆர்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நில பொதுப்போக்குவரத்து ஆணையம் (ஸ்பேட்), அவற்றின் கட்டணங்களை அதிகரிப்பது பற்றி ஆலோசித்து வருவதாக அறிவித்துள்ளது.

இதனிடையே, பள்ளி பேருந்து சங்கம் கட்டணங்கள் 40விழுக்காடு உயர்த்தப்படலாம் எனக் கூறியுள்ளது.

3) மின்சாரம்

2014 ஜனவரியிலிருந்து  மின் கட்டணங்கள் தீவகற்ப மலேசியாவில் 15விழுக்காடும் சாபாவிலும் லாபுவானிலும் 16.9 விழுக்காடும் உயரும்.

4) பனிக்கட்டி

டீசல், மின் கட்டணங்கள் உயர்வதைக் காரணம் காட்டி பனிக்கட்டிகள் விலை உயரும் என கோலாலும்பூர், புத்ரா ஜெயா, சிலாங்கூர் பனிக்கட்டி தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

5) எழுதுபொருள்கள்

மார்ச் மாதத்துக்குள் எழுதுபொருள்கள் 20-இலிருந்து 30 விழுக்காடு வரை விலையேற்றம் காணலாம் என மலேசிய எழுதுபொருள், புத்தக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

6) வெப்பநிலை

வெப்பநிலை 21 பாகை செல்சியசிலிருந்து 24 பாகை செல்சியசாக உயரலாம்.

மலேசிய விற்பனை வளாக மற்றும் உயர்கட்டிட நிர்வாகச் சங்கம், அதன் 400-சொச்சம் உறுப்பினர்களிடமும், இப்போது அக்கட்டிடங்களில் 21 பாகையாக உள்ள குளிர்சாதன வசதியை 23 அல்லது 24 செல்சியசாக உயர்த்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

அது மின்கட்டண உயரவைச் சமாளிக்கும் நடவடிக்கையாம்.

7) வரிகள்

கோலாலும்பூர்வாழ் மக்கள் சொத்து மதிப்பீடு வரி உயர்வை எதிர்நோக்குவர்.

சிலாங்கூரில் வர்த்தக உரிமக் கட்டணம் 400விழுக்காடுவரை உயரலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.