மக்களின் நலனுக்கான போராட்டத்தை இரட்டிப்பாக்க இணைந்து காலடி எடுத்து வைப்போம், வாருங்கள்!

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர், டிசம்பர் 30, 2013.

 

xavier3வணக்கம், அன்புடன் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக சில மாநிலங்களில், மக்களால் ஏற்படுத்தப் பட்டுள்ள இரண்டுக்கட்சி ஆட்சிமுறை, குறுகிய காலத்திலேயே மக்களுக்குச் சிறந்த பயனைத் தந்துள்ளது. அதனை மேலும் மேம்படுத்தி நாட்டின் வளம் மக்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்த மக்களுடன் பக்காத்தான் இணைந்து எடுத்துக் கொண்ட முயற்சிகளை முறியடிக்கும் வண்ணம், புத்ராஜெயா அரசாங்கம், அரசாங்க  இயந்திரத்தைக் கொண்டு 13 வது  பொதுத் தேர்தலில் மக்களின் வெற்றியை பறித்துக்  கொண்டது.

 

பிரதமர் நஜிப், அவரின் ‘’நம்பிக்கை’’ வாக்குறுதியை நம்பியவர்களுக்கு, அம்னோவின் அரசியல் இந்நாடு உள்ளவரை எத்தனைத் தலைவர்கள் மாறினாலும் நாட்டில் சுரண்டல்களும், பிரித்தாலும் கலாச்சாரமும் மாறாது என்ற மறுக்க முடியாத உண்மையை தெளிவாக உணர்த்தி விட்டது. இனி அம்னோவால், பல இன மலேசியாவுக்கு நிச்சயமாகப் பங்காற்ற முடியாது, என்பதனைத் தேர்தலுக்குப் பின் நடந்து வரும் இன, சமயக் கீழறுப்புகளும், பொருளாதாரத் தோல்விகளும், அப்பட்டமான தேர்தல் வாக்குறுதி மீறல்களும் புலப்படுத்துகின்றன..

 

ஒரு பல  இன நாட்டில், ஒரே இன அல்லது ஒரு கட்சியின் குறுகிய அரசியல் வாழ்வுக்காக மட்டும் கொள்கைகள் வகுக்கக் கூடாது. உலகமயப் பொருளாதார யுகத்தில் வாழும் நாம், அடுத்த தலைமுறையினர் தலை நிமிர்ந்து நிற்கவும், அவர்களின் சுகமான வாழ்வுக்குத் திட்டமிடும் பரந்த மனமுடைய பொறுப்பான அரசைக் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தின்  அருமையை மக்கள் உணர்ந்து விட்டனர்.

 

எனது புத்தாண்டு  மகிழ்ச்சியை மலேசிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் இவ்வேளையில், பொறுப்பற்ற நிர்வாக முறை, சுரண்டல், ஊழலால் நாட்டில் விலைவாசிகள் கட்டுக்கடங்காமல்  ஏறிவருவதைக் கண்டிக்காமல்  இருக்க முடியாது. குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர வருமானமுடைய மக்கள் கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதை எண்ணி வேதனையடைகிறேன்.

 

எதிர்வரும் ஆண்டுகளில் மக்கள் அவர்களின் நலனுக்கான போராட்டத்தை இரட்டிப்பாக்க வேண்டும், புத்ராஜெயாவில் மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரே சிந்தையுடன் புதிய ஆண்டில்  அனைவரும்  இணைந்து காலடி எடுத்து வைப்போம் வாருங்கள் என்று அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 

 

 

 

TAGS: