தமிழ்ப்பள்ளிகள் ம.இ.காவின் சொத்து அல்ல! அது மக்கள் சொத்து!

m-kulasegaran தமிழ்ப்பள்ளிகள் என்றுமே ம.இ.கா சொத்தாக இருந்ததில்லை. சுதந்திரத்திற்கு பின்பும் சரி முன்பும் சரி அது சராசரி மக்களின் ஆதரவோடு அவர்கள் பிள்ளகள் அங்கு  படிப்பதால்  இன்றுவரை தாக்குப் பிடித்து வந்துள்ளது என்கிறார் ஈப்போ பாராட்  நாடாளுமன்ற உறுப்பினர் .மு.குலசேகரன்.

மஇகா-வின் ஆரம்பகாலத்தில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது வரலாற்று உண்மை.  ஆனால் வெகுசன மக்கள் போரட்டம்தான் தமிழ் மொழியை வாழ வைத்தது. அதன் பிறகு மொழி கொள்கை அரசியலான போது சீனர்களின் போரட்டம் ஓங்கியது.

குலசேகரன் விடுதுள்ள அறிக்கையில்,  ம.இ.காவால்தான் இது நாள் வரை தமிழ்ப்பள்ளிகள் கட்டிக் காக்கப்பட்டுள்ளன என்பதெல்லாம் வெறும் வெட்டிப்பேச்சி என்கிறார்.  அவரின் முழு அறிக்கை வருமாறு.

ம.இ.கா தலைவர்கள் அன்றிலிருந்து இன்று வரை யாரும் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி தங்களின் மொழிப் பற்றினை காட்டவேயில்லை. இதில் விதிவிலக்காக  சில கீழ் மட்டத் தலைவர்கள் இருந்திருக்கலாம். ஆனால், மேடையில் மட்டும் தமிழ்ப்பள்ளிகளின் காவலன்;  தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்குதான் அனுப்பவேண்டும்  என்று உரக்கப் பேசி ஓட்டுக் கேட்ட தலைவர்கள்தான் அதிகம்.

தமிழ்ப்பள்ளிகளின்பிரச்சனையைஅரசியலாக்க வேண்டாம்என்றுமுன்னாள்பேரா  மாநில சபாநாயகர்கணேசன்கூறியதாகபத்திரிகைச்செய்திவெளியாகியிருக்கிறது.  “அரசியலாக்க வேண்டாம்” என்று கூறுவதே அரசியல் என்பதை கணேசன் உணர்ந்திருக்க வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகள் பற்றி என்ன பேசுவது என்றே தெரியாமல் அதிகமான ம.இ.கா அரசியல்வாதிகள் நிறைய பேர் இன்று இருக்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருந்தது ஒரு தமிழன் தமிழ்ப்பள்ளிகள் பற்றி பேசினால், அது ம.இ.காரர்களுக்கு அரசியல். ஆனால் இவர்கள் பேசினால் அது சமுதாய சேவை, அவர்களின்  உரிமை.  எப்பொழுதிலிருந்து தமிழ்ப்பள்ளிகளை மொத்த குத்தகைக்கு ம.இ.கா எடுத்துக்கொண்டது? ஏன் இந்த அடாவடித்தனம்?

தமிழ்ப்பள்ளி சமுதாயத்தின் சொத்து. இதற்கு சமுதாய அக்கறை உள்ளவர்கள், எக்கட்சியைச் சேர்ந்தவர்களானாலும் கேள்வி கேட்கலாம் போராடலாம், என்பதுதான் ஞாயம்.

கடந்த 6, 7 வருடங்களாக பேரா மாநிலத்தில் எத்தனையோ முறை  தமிழ்ப்பள்ளிகள் மாணவர் குறைவினால் மூடும் அபாயம் உள்ளது என்பதனை நான் சொல்லி வந்துள்ளேன், இருந்தும் அது செவிடன் காதில் ஊதிய சங்காக போயிற்று. இப்பொழுது ஹோலிரோடு பள்ளி மூடுவதைப்பற்றி சுட்டிக்காட்டினால் நான் அதை அரசியலாக்குகிறேன் என்று  கணேசன் குறைபட்டுக்கொள்கிறார்.

இங்கு பிரச்சனைக்கு பேர் சூட்டுவது முக்கியமல்ல. பிரச்சனை தீர வழி காணுவதுதான்  அரசியல் சாணக்கியம். அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு அதன் அனுகூலங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ம.இ.கா அரசியல்வாதிகள் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனையை தலையாயப் பிரச்சனையாகக் கையாளாமல் அதை வாக்கு சேகரிக்க மட்டுமே பயன் படுத்தப்படும் பகடைக்காய் போல பாவிப்பதுதான் வேதனையளிக்கிறது.

கணேசன், லங்காப்பில் தமிழ்ப்பள்ளி கட்டுவோம், ஜெலாப்பாங்கில் புதிய தமிழ்ப்பள்ளி வரும் என்றெல்லாம் கடந்த 7 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார். இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஓரிடத்திலாவது தமிழ்ப்பள்ளிகளுக்கென்று அடையாளமாக ஒரு செங்கல்லாவது இருக்கின்றதா என்று  காட்டச் சொல்லுங்கள், பார்க்கலாம்!

ம.சீசவிற்கு சீனப்பள்ளிகள் மேல் இருக்கும் கரிசனத்தில் ஒரு கடுகளாவது ம.இ.காவினருக்கு இருக்குமா என்பது சந்தேகமே. பேரா ம.இகா என்றைக்காவது, இதுதான் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான ம.இ.காவின் கல்வித்திட்டம் என்று சொல்லியிருக்கிறதா?

எத்தனைப் பள்ளிகள் மாணவர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன? எத்தனைப் பள்ளிகள் அடுத்த 5 ஆண்டுகளில் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்குகின்றன? இது போன்ற விபரங்களெல்லாம் பேரா ம.இ.காவிற்கு தெரியுமா?

நான் சொல்லுகிறேன்: நாட்டிலேயே அதிகமான தமிழ்ப்பள்ளிகளைக் கொண்ட மாநிலமான பேராவில் 25 பள்ளிகள் 20 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்களுடன் செயல்படுகிறந்றன. 7 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவானவர்கள் பயில்கின்றனர்.

இவர்களுக்கான உங்களுடைய திட்டம் என்ன? இவற்கான  மாற்றுப் பள்ளிகளுக்கு தேவையான  நிலங்களை எங்கு அடையாளம் கண்டுள்ளீர்கள்?

அரசாங்கத்திற்கு இது பற்றி ஏதும் கோரிக்கை விடுத்துள்ளீர்களா ?

நான் ஹோலிரோடு தமிழ்ப்பள்ளியைப் பற்றி அறிக்கை விட்டதைப் பற்றியும் சிலர் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.

ஹோலிரோடு தமிழ்ப்பள்ளி மூடப்படுவதை நிறுத்தச் சொல்லி நான் செய்தி விடவில்லை. மாணவர்கள் இல்லாத காரணத்தினால் அது இயற்கை மரணம் அடைவது தவிர்க்க இயலாது. அதற்கு மாற்று நிலம் அடையாளம் தைப்பிங் தாமான் காயாவில் காணப்பட்டும் அதற்கான பூர்வாங்க வேலைகள் இன்னும் ஏன் ஆரம்பிக்கப்படவில்லை என்பதுதுதான் என் கேள்வி.

அதோடு அப்பள்ளிக்கு பள்ளி மேளாளர் வாரியம் அமைப்பது, மாற்று நிலம்  அடையளம் காண்பது, அங்கு தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகள் அனுப்பப்படும் சாத்தியக் கூறுகள் பற்றிய ஆய்வு ஆகிய இவை எல்லாம் பேரா ம,இ.காவால் செய்யப்பட்டது அல்ல என்பது நினைவு கொள்ளத்தக்கது. இவையாவும் அங்கு உள்ள சில தமிழ்ப் பற்றாளர்கள் மூலமாகவே செய்யப்பட்டன. இதனை பேரா ம.இ.காவினர் தங்களின் செயல் என்று சொன்னால் அதை அவர்களைத் தவிற வேரு யாரும் நம்பமாட்டார்கள்.

அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதுதான் ம.இ.காவின் வேலை. அதைக் கூட செய்யாமல் இதை அரசியலாக்கக் கூடாது. அப்பள்ளி நிச்சயமாகக் கட்டப்படும் என்று கூறுவதெல்லாம் வெறும் வெறுப்பேற்றும் வார்தைகளே. ஓரிடத்தில் பள்ளி பறிபோகிறது. இன்னொரு இடத்தில் பள்ளிக்கான நிலம் வெறுமனே காத்துக் கிடக்கிறது. இதன் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்து அதற்கேற்ப செயல்படாமல் இருக்கும் பேரா மாநில ம.இ.காவின் மேல் எந்த தமிழனுக்கும் ஆத்திரம் வருவது இயற்கையே !

எதிர்கட்சிகாரனான நான் உங்கள் குறைகளை, சமுதாயத்திற்கு நீங்கள் செய்யத் தவறிய கடமைகளைச் சுட்டிக் காட்டத்தான் முடியும். அதற்காகத்தான் மக்கள் என்னை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்து அனுப்பியுள்ளார்கள். உங்கள் கையில் ஆட்சி இருக்கும்பொழுது  நீங்கள்தான் அந்த பள்ளிக்கூடத்தை கட்ட முயற்சிகள் எடுக்க வேண்டும்.

உங்களின் பிச்சனை என்னவென்றால் , தமிழ்ப் பள்ளிகள் உங்களின் சேவைப்  பட்டியலில் முதல் இடத்தில் இல்லை. அது எங்கோ ஒரு மூலையில் தேவைப்படும்போது கையாள கிடப்பில் கிடக்கிறது.

இதுதான் எனக்கு வேதனையைக் கொடுக்கிறது. தமிழ்ப் பள்ளிகளுக்க நான் 4 ஆண்டுகளுக்கு  முன்பு ஒரு வட்டமேசை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தபொழுது கூட அது ம.இகாவின் ஆதரவின்மையால்தான் கைவிடப்பட்டது.

தமிழ்ப்பள்ளிகளும், தமிழ் மொழியும் இந்த நாட்டில் அழிவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் அதனை ம.இ.கா சட்டை செய்யாமல் இருப்பது அது இந்திய சமுதாயத்திற்கு இழைக்கும் ஒரு மாபெரும் துரோகமாகும். இதனை ம.இ.கா உடனடியாக உணர்ந்து தனது செயல்பாட்டில் தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். அதை அரசாங்கத்திற்கு சொல்லி அதற்காக போராட வேண்டும். அதற்காகத்தானே ம.இ.கா தன்னை இந்தியர்களின் பிரதிநிதி என்று சொல்லி மார்தட்டிக் கொள்கிறது.

TAGS: