கிறிஸ்துவ நாடாக்கும் சதித்திட்டம் இருப்பது உண்மை, முன்னாள் டிஏபி ஆதரவாளர்

முன்னாள் டிஏபி உறுப்பினர் முகம்மட் ரசாலி அப்துல் ரஹ்மான், “சில தரப்பினர்” இவ்வாண்டு தொடக்கத்தில் தாம் அம்பலப்படுத்திய “கிறிஸ்துவ சதித்திட்ட”த்தை மறுப்பதன்வழி பொதுமக்களைக் குழப்பி வருகிறார்கள் என்று எச்சரித்துள்ளார்.

“இவ்விவகாரத்தை ஆய்வு செய்துவரும் அதிகாரிகளின் நம்பகத்தன்மை குறித்து எவரும் கேள்வி எழுப்பக்கூடாது….நான் அங்கிருந்தேன், அதனால் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும்”, என்றவர் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தியொன்று தெரிவித்துள்ளது.

அக்கூற்றுக்கு ஆதாரமில்லை என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதிலில் உறுதிப்படுத்தியிருப்பதாக ஜெலுத்தோங் எம்பி ஜெப் ஊய் தெரிவித்திருப்பதன்மீது ரசாலி இவ்வாறு கருத்துரைத்தார்.

கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்ளி நோர்டினுக்கு அளித்த எழுத்துவடிவிலான பதிலில்,  அவ்விவகாரத்தில் “மேல்நடவடிக்கை இல்லை” என்று அரசு வழக்குரைஞர் முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாதிரிமார்கள் பலரும் ஊய்யும் சேர்ந்து கிறிஸ்துவத்தை அதிகாரப்பூர்வ சமயமாக்க சதி செய்து வருவதாக மே 7-இல் உத்துசான் மலேசியாவில் வெளிவந்த செய்தியை அடுத்து இச்சர்ச்சை மூண்டது.

மே 5ஆம் 6ஆம் நாள்களில் நேசனல் இவென்செலிகல் கிறிஸ்டியன் பெல்லோஷிப்(National Evangelical Christian Fellowship), குளோபல் டே அப் பிரேயர்(Global Day of Prayer), மார்கெட்பிளேஸ் பினேங் (Marketplace Penang), பினேங் பாஸ்டர்ஸ் பெல்லோஷிப்(Penang Pastors Fellowship) ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் இச்சதித்திட்டம் உருவானதாகக் கூறப்படுகிறது.

கேள்விக்குப் பதிலளித்த ஹிஷாமுடின், ஊய்   “உத்துசான்மீது வழக்கு தொடுக்க”த் தயாரா என்று எதிர்கேள்வி ஒன்றையும் போட்டார்.

அமைச்சர் முதலில், “கிறிஸ்துவ சதி” என்று கூறப்படுவதில் “ஓரளவு உண்மை” உண்டு என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், அப்படி எதுவும் இல்லை என்று வன்மையாக மறுத்தார்.