மதமாற்றத்துக்கு எதிரான பேரணி (ஹிம்புன்) ஓர் உள்ளரங்கில் நடைபெறுகிறது என்பதால், அது சமயப் பதற்றநிலையை உண்டுபண்ணலாம் என்று பாஸ் கவலைகொள்ள வேண்டியதில்லை எனப் பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம் கூறியுள்ளார்.
இன்று, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜமில் கீர், ஹிம்புன் ஏற்பாட்டாளர்கள், அப்பேரணியை ஷா ஆலம் விளையாட்டரங்கில் நடத்த அனுமதி பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார். இதனால் விரும்பத்தகாத நிகழ்வுகள் தவிர்க்கப்படும்.
“ஒழுங்கை நிலைநிறுத்த ஏற்பாட்டாளர்களே பொறுப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்….அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் சில விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
“பேரணி ஒரு அரங்கில் நடைபெறுவதால் பிரச்னைகள் எழாது”, என்று இஸ்லாமிய விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் அமைச்சரான ஜமில் கூறினார்.
“இது, ஆத்திரம் கொண்டோரின் ஆர்ப்பாட்டம் அன்று என்றாரவர்.”
ஹிம்புன் இணையத்தளம், “கிறிஸ்துவத்தை அதிகாரப்பூர்வ சமயமாக்கும் ஆகஸ்ட் 3 திட்டத்தை எதிர்க்கும் முஸ்லிம்களின் ஒற்றுமையை அளவிடுவதே” பேரணியின் தலையாய நோக்கம் என்று கூறியது.
டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், மதமாற்றம் செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டு அதில் சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகார இலாகா (ஜயிஸ்) புகுந்து அதிரடிச் சோதனை நடத்திய விவகாரத்தைத் தொட்டு அது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
அங்கு அப்போது அரசுசாரா அமைப்பான ஹராபான் கம்முனிடி நன்றிநவிலும் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில்தான் ஜயிஸ் அதிரடிச் சோதனையை நடத்தியது.
ஜயிஸ் மேற்கொண்ட ஆய்வில் 12 முஸ்லிம்களும் கலந்துகொண்டிருந்த அந்நிகழ்வில் முஸ்லிம்களை மதம் மாற்றும் முயற்சிகள் நடந்ததற்குஆதாரங்களும் சிக்கியிருப்பதாகக் கூறப்பட்டது.
அந்த இணையத்தளம், பேரணிக்கு 25 என்ஜிஓ-க்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறியது.ஆனால், ஊடகங்கள் ஆயிரம் எனஜிஓ-க்கள் அதில் கலந்துகொள்ளப்போவதாகத் தெரிவிக்கின்றன.
இஸ்லாமியக் கட்சியான பாஸ் அதில் கலந்துகொள்ளாது. அது அரசியல் கலப்பற்ற பேரணி என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருப்பதால் அதை மதித்து அதிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அது கூறிற்று.
இதற்குமுன் அது அம்னோவின் ஏற்பாடாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அதனால் “சமயரீதியில் பதற்றம்” உண்டாகலாம் என்று அக்கட்சி கவலை தெரிவித்திருந்தது.